ஒருங்கிணைந்த அதிமுக + பாஜக + சீமான்.. திமுக தண்ணி குடிக்கப்போவது உறுதி.. சொல்வது பத்திரிகையாளர் மணி!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகவும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத் தேர்தல் போல் அல்லாமல், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக கூட்டணி கடுமையான சவாலை திமுகவுக்கு அளிக்கும் என்று கூறியுள்ள பத்திரிகையாளர் மணி, நாம் தமிழர் கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சட்டசபைக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் தங்கமணி லேப் டாப் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, எங்கோ இருந்து அதிமுக தொண்டர்களின் எதிர்காலத்தை களத்தில் நீர்த்துப் போக செய்யும் அளவிற்கு சாணக்ய தந்திரத்துடன் சிலர் கூட்டல் கழித்தல் கணக்குகளை போட்டு கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

எடப்பாடி - அமித் ஷா சந்திப்பு
அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருந்த போது, சட்டசபையிலேயே அதிமுகவுக்கு வார்னிங் கொடுக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசி இருந்தார். இதற்கு, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். இந்த நிலையில் நேற்று டெல்லியில் எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பத்திரிகையாளர் மணி கருத்து
இதனால் இன்னும் சில நாட்களில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக பத்திரிகையாளர் மணி நமது ஒன் இந்தியா தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், பாஜக பக்கம் அதிமுகவை தள்ளிவிட வேண்டும் என்று திமுக நினைக்கிறார்கள். அதிமுக - பாஜக உருவாகிவிட்டால், தங்களுக்கு எளிது என்று கருதுகிறார்கள்.
காங்கிரஸ் போட்ட கணக்கு
இஸ்லாமியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்று திமுக நினைக்கிறது. ஒருவேளை ஒருங்கிணைந்த அதிமுக, பாமக, பாஜக மற்றும் இதர கட்சிகள் வந்துவிட்டால், திமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் தண்ணி குடிக்கும். வெல்வது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. அதனால் திமுக பயப்படாததை போல் நடிக்கிறார்கள். அதேபோல் 2011ல் திமுகவின் கூட்டணி கணக்கை காங்கிரஸ் கட்சி போட்ட வரலாறு இருக்கிறது.
வரலாறு என்ன தெரியுமா?
காங்கிரஸ் கட்சிக்கு இடமில்லை என்று கூறிவிட்டு, சோனியா காந்தி அழைத்து மிரட்டியவுடன் சீட் கொடுத்தார்கள். 63ல் 5 தொகுதி மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தை ஒரு பக்கம், தயாளு அம்மாளிடம் சிபிஐ விசாரணை ஒரு பக்கம், கலைஞர் டிவியில் சிபிஐ ரெய்டு ஒரு பக்கம் என்று சம்பவங்கள் நடந்தது. இது எவ்வளவு வெட்கக்கேடானது. அவ்வளவு விட்டுக் கொடுத்தும், அடுத்த மாதமே கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி பதிலடி
2ஜி வழக்கில் அந்த கூட்டல் கழித்தல் செய்து மிரட்டி தானே காங்கிரஸ் கட்சியினர் 63 தொகுதிகளை வாங்கினார்கள். இந்த வரலாற்றையும் தங்கம் தென்னரசு தெரிந்து கொண்டு பேசினால் சரி.. அதனை சட்டசபையில் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு எடப்பாடி பழனிசாமி வெளியில் வந்து சரியான பதிலடி கொடுத்தார். திமுக மட்டுமே முதல் எதிரி, அவர்களை வீழ்த்துவதே நோக்கம் என்று கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் கணக்கு
இதன் மூலமாக பாஜகவுடன் செல்லவும் தயார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். 2021 தேர்தலில் இதே பாஜக மற்றும் பாமக உடன் கூட்டணி வைத்துதான் அதிமுக 75 தொகுதிகளில் வென்றது. நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு வேறு, சட்டமன்றத் தேர்தல் கணக்கு வேறு.. இதனை கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் ஒன்றுபட்ட அதிமுக வருகிறது என்று நினைக்கிறேன்.

ஒருங்கிணைந்த அதிமுக
அவர்களுக்குள் ஒருங்கிணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. நானறிந்த வரையில் அனைவரும் ஒன்று சேர்கிறார்கள். ஒருவேளை ஒருங்கிணைந்த அதிமுக உருவானது என்றால், அது பெரிய பலம். அதிமுக ஒன்றுபட்ட போதெல்லாம் திமுக வென்றதே கிடையாது. ஒருவேளை திமுக ஆட்சியில் இருந்த போது, ஒருங்கிணைந்த அதிமுக உருவாகினால், 2வது முறையாக ஆட்சிக்கு வராது. அது அரிதினும் அரிது. இதுவரை திமுக 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததாக வரலாறே கிடையாது.
200 தொகுதிகள் கனவு
இதனை அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். ஏனென்றால் சபாநாயருக்கு எதிரான தீர்மானத்தில் செங்கோட்டையன், ஓபிஎஸ் ஆதரவாக வாக்களித்தார்கள். பழைய கூட்டணி வந்தால், நிச்சயம் 2026 சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும். 200 தொகுதிகள் எல்லாம் வெல்லவே முடியாது. அதேபோல் அதிமுக கூட்டணியில் சீமான் இணைவார் என்று தகவல் வருகிறது.
அதிமுக கூட்டணியில் நாதக?
தேர்தல் நெருங்கும் போது திமுக மற்றும் அதிமுக என்ற இரு கட்சிகள்தான் இருக்கும். திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால், அதிமுக மட்டுமே ஒரே வாய்ப்பாக மாறிவிடும். விஜய் வந்தால், மும்முனை போட்டியாக இருக்கும். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ஒரு தொங்கு சட்டமன்றம் தமிழ்நாட்டில் உருவாகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications