பொன் ராதாகிருஷ்ணன் சொன்னது நடந்துருமோ.. ஒரு பக்கம் பாஜக.. மறுபக்கம் பாமக.. குழப்பத்தில் அதிமுக!
சென்னை: பயங்கரமான டெக்னிக்குடன்தான் பாஜக காய் நகர்த்தி வருவது போல தெரிகிறது. 2021 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க அது நெருக்கி வருவதாக கூறப்படுகிறது. முதலில்கூட்டணி ஆட்சி.. பின்னர் அதையே தனது ஆட்சியாக மாற்றும் திட்டம் இதில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் நாம் தான் ஜெயிப்போம் என்ற அதீத நம்பிக்கையில் திமுக உள்ளது. மக்களிடம் அதிமுகவிற்கு எதிராக அடுத்த ஒரு வருடத்தில் பல விஷயங்களை கொண்டு போய் சேர்க்க பிரசாந்த் கிஷோர் இருக்கிறார் என்று அதிமுகவுற்கு எதிராக துல்லிய தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருகிறது திமுக.
அதேநேரம் ஆளும் கட்சியான அதிமுக 2021 சட்டசபை தேர்தலை சந்திக்க ஜெயலலிதா பாணியில் மக்கள் நல திட்டங்களை கையில் எடுத்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக அம்மா உணவகம் பக்கம் அதிமுக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அதற்கு 100 கோடி ஒதுக்கி பணிகளை அதிமுக அரசு துரிதப்படுத்திஉள்ளது. ஏழை மற்றும் சாமானிய மக்களை கவர முடியும் என்று எடப்பாடியார் நம்புகிறார். அத்துடன் பல மக்கள் நல திட்டங்களை அடுத்த ஓராண்டில் மக்களுக்கு உடனே கொண்டு போய் சேர்க்க அதிரடி திட்டங்களை வகுத்து வருகிறார்.

கூட்டணி ஆட்சி
இது ஒருபுறம் எனில் 2011 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி எப்படி திமுகவை நெருக்கி அதிக சீட்டுகளை பெற்றதோ அதே பாணியில் 2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவை நெருக்கி அதிக சீட்டுகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என பாஜக விரும்புகிறது.

கூட்டணி அரசியல்
இதற்கான வேலைகளில் பாஜக இறங்கி உள்ளது .பாஜக கூட்டணியில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்டவை உள்ளன. பாஜக கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றால் பாமகவும் சும்மா இருக்காது. நிச்சயம் அதிக சீட்டுகளை கேட்கும். நாடாளுமன்ற தேர்தலில் பாமக 7 தொகுதிகளை கேட்டு பெற்றது. எனவே அதே பாணியில் அதிக சீட்டுகளை கேட்க பாமக ஆயத்தமாகி வருகிறது.

பாஜக அங்கம் வகிக்கும்
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ் ஆகியோர் நேற்று காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மனை தரிசனம் செய்தார்கள். அப்போது பேசிய பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 2021 தேர்தலில் பாஜக அங்கம் வகிக்க கூடிய கூட்டணி அரசு தான் அமைய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம்.. மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்றார்.

எடப்பாடியார் அதிரடி
ஆனால் அதிமுக இதற்கு உடன்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு வேளை அதிமுக இதை விரும்பினால் மக்கள் அதை அனுமதிப்பார்களா என்பது இன்னொரு கேள்வி. கூட்டணிக் கட்சிகளை சுமந்து தேர்தலுக்குப் பிறகும் சிரமப்பட வேண்டுமா அல்லது தனித்துப் போட்டியிட்டு சிங்கம் போல களம் காணலாமா என்றும் அதிமுக யோசிக்கும். ஆனால் தனித்துப் போட்டியிட அதிமுக முயன்றால் இரட்டை இலைக்கு ஆப்பு வைக்கும் வேலையில் டெல்லி இறங்கலாம் என்பதும் இங்கு மறுக்க முடியாதது.












Click it and Unblock the Notifications