புது வரலாறு.. இஸ்ரோவின் 100வது ராக்கெட்.. NVS-02 செயற்கைக்கோளின் பயன்கள் என்ன? முழு விவரம்!
சென்னை: இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV-F15 ரகம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த ராக்கெட் கொண்டு செல்லும் NVS-02 என்ற செயற்கைக்கோளின் விவரங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் என்னவென்று பார்க்கலாம். அதேபோல் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணன் தலைமையில் அனுப்பப்படும் முதல் ராக்கெட் இதுவாகும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நாளை தனது 100வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட்டை நாளை காலை விண்ணில் செலுத்தவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த ராக்கெட் NVS-02 என்ற செயற்கைக்கோளையும் சுமந்து செல்லவுள்ளது.

ஏற்கனவே 2023ஆம் ஆண்டு மே மாதம் NVS-01 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விண்வெளியில் செலுத்தி இருந்தது. எஸ்எஸ்எல்வி, பிஎஸ்எல்வி என்ற வரிசையில் தற்போது ஜிஎஸ்எல்வி உள்ளது. ஜிஎஸ்எல்வி வகையில் இஸ்ரோவால் விண்ணில் ஏவப்படும் 17வது ராக்கெட் இதுவாகும். இந்த ராக்கெட் மொத்தமாக 50.9 மீட்டர் உயரமும், 420.7 டன் எடையும் கொண்டதாகும்.
அதேபோல் NVS-02 செயற்கைக்கோளின் எடை மட்டும் 2,250 கிலோவாகவும் உள்ளது. இந்த ராக்கெட் 19 நிமிடங்களில் 322 கிமீ தொலைவு செல்ல முடியும். இந்த NVS செயற்கைக்கோளின் பயன்பாடுகளை பொறுத்தவரை இந்தியாவின் வலையமைப்பு நேவிகேஷனை துல்லியமாக கொடுப்பது தான். ஏற்கனவே உள்ள 4 செயற்கைகோளுடன் சேர்ந்து தரை, வான் மற்றும் கடல் வழி போக்குவரத்தை கண்காணித்து தகவல் அளிக்கும்.
அதேபோல் இந்த செயற்கைக்கோள் நாட்டின் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, நில வடிவமைப்பு, விவசாயம், துரித நிவாரண சேவைகள், சர்வே உள்ளிட்ட விஷயங்களுக்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் நில வரைப்பட அமைப்பை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் 3 வாரங்களுக்கு முன்பாக தான் இஸ்ரோவின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணம் நியமனம் செய்யப்பட்டார். 1984ல் இஸ்ரோவில் இணைந்த இவர், 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக விண்வெளி துறையில் அனுபவம் வாய்ந்தவர். இவர் தலைமையில் விண்ணில் ஏவப்படும் முதல் ராக்கெட் என்பதால், தமிழக மக்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications