Exclusive:கோவை ஸ்டேடியத்தில் ஊக்கமருந்து ஊசிகள்.. பின்னணி என்ன? கெட்டில் பெல் உலக சாம்பியன் விளக்கம்
சென்னை: ஊக்கமருந்துகள் எடுத்து போட்டியில் வெல்வது என்பது கோழைத்தனம் என கெட்டில் பெல் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற விக்னேஷ் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
கெட்டில் பெல் போட்டியில் உலக சாம்பியன் பெற்ற விக்னேஷ் ஹரிஹரன் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கெட்டில் பெல் என்றால் அதுவும் பளுதூக்கும் போட்டியை போல்தான். ஆனால் இதற்கு Endurance lifting என்பார்கள். சில வினாடிகளில் யார் அதிகபட்ச எடையை தூக்குகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். இந்த விளையாட்டு ரஷ்யாவுடையது.

கேள்வி: கோவை நேரு உள்விளையாட்டரங்கில் கழிப்பறையில் வலி நிவாரண மருந்துகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: இது புதியது அல்ல. 1990 களிலிருந்தே ஊக்கமருந்து எடுத்துக் கொண்டு விளையாடுவது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஊக்கமருந்து எடுத்து அதன் மூலம் வெற்றி பெறுவது என்பது கோழைத்தனம் ஆகும். ஃபிட்னஸ் என்றாலே விளையாட்டு வீரர்களை குறிக்கும் நிலையில் ஊக்கமருந்து மூலம் அந்த பெயரை தவறாக பெறுவது நல்ல பாதை அல்ல.
கேள்வி: ரத்தம் கூட உறையாத ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு எந்த மாதிரியான விளையாட்டுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது?
பதில்: கோவை ஸ்டேடியத்தில் வலி நிவாரண மருந்துகள் இருந்ததால் அந்த இடத்தில் போட்டிகள் நடந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு வீரரோ வீராங்கனையோ தங்களது இலக்கை அடைய வேண்டும் என்றால் 2 ஆண்டுகள் முதல் வாராந்திரம் வரை திட்டமிடுவார்கள். ஒவ்வொரு கால இடைவெளிக்கும் ஒவ்வொரு மாதிரியான ஊக்க மருந்துகள் உள்ளன. விளையாட்டு போட்டி நடப்பதற்கு முன்னர் ஊக்கமருந்து எடுப்பதும் இருக்கிறது. போட்டிகள் நடக்காவிட்டாலும் ஊக்கமருந்துகளை எடுப்பர்.
கேள்வி: ஊக்கமருந்தை ஒரு வீரர் எடுத்து எத்தனை நாட்களுக்குள் அது வேலை செய்ய தொடங்கும்?
பதில்: இந்த ஸ்டீராய்டுகள் என்பது ஹார்மோன் ஊசியாகும். இவை நம் உடலில் இயற்கையாக இருக்கும் ஹார்மோன்களை விட அதிக அளவு ஆற்றலை கொடுக்கும். இதனால் வேகம், வலிமை அதிகரிக்கும். ஒரு முறை ஊக்கமருந்து எடுத்தாலே அதன் வலிமை உடலில் இருந்து கொண்டே இருக்கும். வெற்றி, பணம், கோப்பை ஆகியவற்றில் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்கும். உடல்நலம் என பார்க்கும் போது இதன் பக்கவிளைவுகள் அதிகம்தான். குறுகிய காலத்திற்கும் ஸ்டீராய்டுகள் உள்ளன. நீண்ட காலத்திற்கும் ஸ்டீராய்டுகள் உள்ளன.
கேள்வி: வீரரோ வீராங்கனையோ ஸ்டீராய்டு எடுத்திருக்கிறார் என்பது எவ்வளவு நேரத்திற்குள் தெரியவரும்?
பதில்: ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்துவிடலாம். எடை தூக்குதல், தடகளம் உள்ளிட்ட போட்டிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் செலுத்தினால் அது ஒரு மணி நேரம் வரை உடலில் வீரியத்துடன் இருக்கும். அதன் பின்னர் மெதுவாக வீரியம் குறைந்துவிடும்.

கேள்வி: ஊக்கமருந்து சோதனை ஏன் எல்லா போட்டிகளிலும் கட்டாயம் என கொண்டு வரவில்லை?
பதில்: இன்று வரை எல்லா போட்டிகளிலும் ஊக்க மருந்து சோதனை என்பது கட்டாயம்தான். ஊக்கமருந்து சோதனையின் போது ரத்தம், சிறுநீரில் ஒரு குறிப்பிட்ட மருந்துகளின் சாம்பிள்கள் இருக்கக் கூடாது என்ற பட்டியலை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனங்கள் கொடுத்துவிடும். ஆனால் அறிவியலின் வளர்ச்சியால், அவர்கள் குறிப்பிட்ட ஊக்கமருந்து எடுத்தது வெளியே தெரியாமல் இருக்க அதற்கு ஒரு மாற்று மருந்தையும் எடுத்துக் கொள்வார்கள். இதனால் ஊக்கமருந்து சோதனையில் அவருக்கு நற்சான்றிதழ் கொடுக்கப்படும்.
கேள்வி: ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தால் பெற்ற மெடல்களை திரும்பி எடுத்துக் கொள்வார்கள் என தெரிந்தும் குறுக்கு வழியில் ஜெயிக்க வேண்டிய அவசியம் என்ன?
பதில்: ஊக்கமருந்து சோதனைகள் அதிக விலை என்பதால் எல்லா போட்டிகளிலும் செய்யப்படுவதில்லை. சில முக்கிய போட்டியிகளில் மட்டும்தான். அது போல் ஊக்கமருந்து சோதனை நடந்து தவறு நிரூபிக்கப்பட்டு மெடல்களை திருப்பி வாங்கிக் கொள்வது என்பது மிக நீளமான பிராசஸ். ஒலிம்பிக்கில் உடனே கண்டுபிடித்துவிடலாம். காரணம் நிறைய ஸ்பான்சர்கள் இருக்கிறார்கள். பணம் இருக்கிறது.
கேள்வி: ஊக்கமருந்து எடுப்பதை தடுக்க மத்திய மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும்.
பதில்: அரசே எடுத்து நடத்தும் முக்கிய போட்டிகளில் நுழைய ஊக்கமருந்து சோதனை என்பது கட்டாயமாக்க வேண்டும். அது போல் கூட்டமைப்புகள் நடத்தும் போட்டிகளுக்கு ஊக்கமருந்து சோதனை கட்டாயம் என்பதை அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிகாரிகளும் லஞ்சம் வாங்காமல் இதை செய்தால் ஊக்கமருந்து எடுப்பதற்கு ஒரு முடிவு வரும்.
கேள்வி: கெட்டில் பெல் விளையாட்டு பிரபலமடைய அரசு என்ன செய்ய வேண்டும்.
பதில்: பெரிய விளையாட்டு, சிறிய விளையாட்டு என பார்க்காமல் வெற்றி பெறுவோரை அழைத்து பாராட்ட வேண்டும். அரசு சார்பில் ஒரு 2000 ரூபாய் ஊக்கத் தொகை கொடுத்தாலே பெரிய விஷயமாக இருக்கும். குறைந்தபட்சம் ஒரு ட்விட்டரிலாவது மாநில முதல்வர் வாழ்த்தினால் பெருமையாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications