V Vasanthi Devi: கல்வி தனியார்மயத்தை எதிர்த்தவர்.. பெண் உரிமை போராளி! வே.வசந்தி தேவி பயணம் சொல்வது என்ன?
சென்னை: சிறந்த கல்வியாளரும், பெண் உரிமை போராளியுமாக அறியப்பட்ட வே. வசந்தி தேவி நேற்று காலமானார். அவரது உடல் இன்று அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது. அவரது வாழ்க்கையும் போராட்டமும், சமூக மாற்றத்தில் ஈடுபாடு கொண்ட அனைவருக்கும் ஒரு பாடத்தை விட்டு சென்றிருக்கிறது.
யார் இந்த வசந்தி தேவி? இவர் திண்டுக்கல்காரர். 1938ல் பிறந்த இவர் சென்னை ராணி மேரி கல்லூரியிலும், உயர்கல்வியை பிலிப்பைன்ஸிலும் பயின்றிருக்கிறார். அங்கிருந்து இந்தியா வந்த அவர் தான் படித்த அதே ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராகவும், கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராகவும், பின்னர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றியிருக்கிறார்.

கல்வியும் வசந்தி தேவியும்
அடிப்படையில் இடதுசாரி சிந்தனை மீது பற்றுக்கொண்ட இவர், கல்வி தனியார் மயத்திற்கு எதிரான தீவிரமாக கருத்தியல் போரை நடத்தியிருக்கிறார். கல்வி ஏன் தனியார்மயம் ஆக வேண்டும்? இது யாருக்கு பலன் தரும்? தனிநபர்கள் லாபத்தைதான் நோக்கமாக வைத்து செயல்படுவார்கள். அப்படியெனில் கல்வி லாபம் கொழிக்கும் துறையா? சேவையாக வழங்க வேண்டிய ஒன்று எதற்காக தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது?
இந்திய தேர்வு முறைகள் நியாயமானதா? புதிய கல்விக்கொள்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மும்மொழிக்கொள்கை ஏற்கத்தக்கதா? மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் பயில வேண்டுமா? தாய்மொழியின் அவசியம் என்ன? சிந்தனை திறன் தாய் மொழியில் எவ்வாறு மேம்படுகிறது? மழழையர் மாணவர்களுக்கு தேர்வு ஏன்? என பல கேள்விகளை எழுப்பி அதற்கான சரியான விளக்கத்தையும் கொடுத்திருந்தார்.
கல்வியர்கள், மாணவர்கள் மத்தியில் வசந்தி தேவியின் விளக்கம், கல்வி தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தின் ஆயுதமாக இருந்தது. அவர்கள் வசந்தி தேவியை சுவீகரித்துக்கொண்டர்.
பெண்ணுரிமை போராளி
கல்வியை தாண்டி, பெண் உரிமைகளில் வசந்தி தேவி சிறந்த போராளியாகவும் ஜொலித்தார். பெண் சிசு கொலையை தடுக்க இவர் எடுத்த முயற்சி இதற்கு சிறந்த உதாரணம். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் ஒன்று மதுரை செக்கானூரணியில் நடந்தது. பெண் சிசுகொலைதான் அது. கள்ளிப்பால் கொடுத்து பெற்றோர் பெண் குழந்தையை கொலை செய்திருக்கிறார்கள்.
பெற்றோருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் கூறிக்கொண்டிருந்த நிலையில், வசந்தி தேவியின் பார்வை வேறு பக்கம் திரும்பியது. அவர் நேரடியாக களத்தில் இறங்கினார். மதுரை வீதிகளில் கால்நடையாக சென்று சிசுக்கொலை குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். அந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருந்தன.
பெண் சிசு கொலை
"ஏன் பெண் குழந்தைகளை கொல்கிறீர்கள்?" என கிராம மக்களிடம் இவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பெண்கள், "பொம்பள புள்ள வளர்ந்து கட்டிக்கொடுக்கும்போது இத்தனை சவரன் போடனும்னு கேட்பாங்க. முடியாட்டி அந்தபிள்ளையே அரளி வெதைய அரச்சி திண்ணுட்டு செத்து போயிடும். அதுக்கு இப்போவே கொன்னுடுறது எவ்வளவோ பரவாயில்லை" என்று பதிலளித்துள்ளனர்.
அதாவது பெண் சிசுகொலைக்கு காரணம் வரதட்சணை தான். இதே கிராமத்து வயதான ஆண்களிடம், "உங்க காலத்துல நீங்க என்ன வரதட்சணை வாங்கின?" என கேட்டிருக்கிறார்.
"நாங்க என்னத்த வாங்கினோம்? அப்போ எல்லாம் எதுவும் கிடையாதுங்க" என்று ஆண்கள் பதிலளிக்க, "சரி இப்போ மட்டும் ஏன்? வாங்குறாங்க?" என கேள்வி எழுப்பியுள்ளார் வசந்தி தேவி. "இப்போ காலம் மாறி போச்சு. அதுக்கேத்த மாதிரி நாமளும் மாறிக்கனும் இல்ல.. அதனாலதான் கேக்குறாங்க" என பதில் வந்திருக்கிறது.
காரணம் என்ன?
இந்த விவகாரத்தை அப்படியே பதிவு செய்யாமல், டீகோட் செய்திருக்கிறார். மதுரை உசிலம்பட்டி பகுதியில்தான் செக்காணூரணி வருகிறது. உசிலம்பட்டியின் பாலின விகிதம் குறித்து ஆய்வு நடத்திய வசந்தி தேவி, சில முக்கியமான விஷயங்களை வெளியில் கொண்டு வந்தார்.
கடந்த 1981ல் உசிலம்பட்டி தாலுகாவின் பாலின விகிதம் 961. அதாவது 1000 ஆண்களுக்கு 961 பெண்கள்தான் இருக்கிறார்கள். இது மதுரை மாவட்டத்தின் பாலின விகிதமான 989, தமிழ் நாட்டின் 987 ஆகியவற்றைவிடக் குறைவு. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில் இதே பகுதியில் கடந்த 1961, 1971ல் உயர்ந்திருந்த பாலின விகிதம், 1981-க்குள் மிகக் கடுமையாக சரிந்தது எப்படி என்பதுதான். ஆக 1971க்கும் 1981க்கும் இடையே ஏதோ நடந்திருக்கிறது.
இந்த விஷயத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்த வசந்தி தேவி, தமிழ்நாட்டின் திருமண அமைப்புகள் குறித்தும் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டின் திருமண முறையில் வரதட்சணை கிடையாது. அது சமஸ்கிருத நாகரிகத்திலிருந்து வந்தது.
விரிவான ஆய்வு
இந்த பின்னணியில் செக்கானூரணியில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கையில் மட்டும் எப்படி குவிந்தது? விவசாய கூலி அதிகரித்தது, செல்வம் குவிந்திருந்த குடும்பத்தில் வரதட்சணை தலைதூக்கியது, அது சாமானிய மக்களையும் எப்படி பாதித்தது? அதன் பின்னணியில் பெண் சிசு கொலை எப்படி உருவானது? என ஒரு விரிவான அறிக்கையை தயார் செய்தார். அதில் சிசுகொலையை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆய்வு, பெண் சிசு கொலைக்கு எதிராக, பெண் உரிமையை பாதுகாக்க களத்தில் நிற்பவர்களுக்கு பெரிய அளவில் உதவி வருகிறது.
இப்படி ஆழமான அறிவும், கள ஆய்வும், அதை சாமானிய மக்களுக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் தன்மைதான் மற்ற கல்வியாளர்களிடமிருந்து வசந்தி தேவியை தனித்து காட்டியது.
அவர் கல்வியாளர், மனித உரிமை போராளி, பெண் உரிமைக்காக விடாபிடியாக களத்தில் நிற்பவர். ஒருவேளை பிலிப்பைன்ஸில் அவர் கல்வி பயின்றபோது அப்படியே அமெரிக்கா, பிரிட்டன் என்று செட்டில் ஆகியிருக்கலாம். ஆனால் அவர் தனது அறிவை தற்போதையை தமிழ் சமூகத்தின் மாற்றத்திற்கு பயன்படுத்தினார்.
இன்று அவர் மறைந்திருக்கலாம். ஆனால் அவரின் பங்களிப்புகள் என்றும் சமூகத்தில் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும். அதன் வழியாக அவர் வாழ்ந்துக்கொண்டுதான் இருப்பார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications