வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வம் வீரசக்க தேவி! அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு வைகோ கடிதம்!
சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வ கோவிலான வீரசக்கதேவி கோவில் சீரமைப்புப் பணிகளுக்கு தொல்லியல் துறை ஒப்புதல் தர வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு வைகோ கடிதம் எழுதியிருக்கிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததியினர் தலைக்கட்டு வரி வசூலித்த பணத்தில் கோவில் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ எழுதிய கடிதம் வருமாறு;

இந்திய சுதந்திரத்திற்காக வீர முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயம், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ளது.
இக்கோவிலின் முன்பகுதியில் தென்புறத்திலுள்ள பழைய சுண்ணாம்புக் கல் கட்டடமும், ஓட்டுச் சாய்ப்புகளும் சிதலமடைந்துவிட்டது. 2013ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததியினர் தலைக்கட்டு வரி வசூலித்த பணத்தில் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியை அச்சந்ததியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரசக்கதேவி ஆலயக் குழுவினர் மேற்கொண்டு வந்தனர்.
இப்பணிகள் சிறிது சிறிதாக நடைபெற்று வந்த நிலையில், சிலர் அத்துமீறி கோட்டையின் உள்ளே இறங்கி இடிக்கிறார்கள் என்று 30.01.2021 அன்று இரவு பொய்யான தகவலை ஒரு சிலர் அளித்ததால், தாசில்தார் மற்றும் காவல்துறையினர் வந்து கோவில் புனரமைப்புப் பணிகளை நிறுத்திவிட்டார்கள்.
ஆலயக் குழுவினர் இதுகுறித்து, தாசில்தாரிடம் கேட்டபோது, மாவட்ட ஆட்சித் தலைவரைச் சென்று பாருங்கள் என அவர் கூறி இருக்கிறார். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டதன் பேரில். 03.02.2021 அன்று கள ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர், உண்மை நிலையைப் புரிந்துகொண்டு, தொல்லியல்துறை இயக்குநருக்கு அறிக்கையை அனுப்பிவிட்டு ஆலயக் குழுவினர் தொல்லியல் துறை இயக்குநரை சந்திக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.
அவர்களும் 19.02.2021 அன்று தொல்லியல்துறை இயக்குநர் உதயசந்திரன் அவர்களை நேரில் சந்தித்து அனைத்து ஆவணங்களையும் அளித்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது.

எனவே, பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய சீரமைப்புப் பணி நடைபெறுவதற்கு தாங்கள் ஒப்புதல் அளித்து, வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் நிலைத்து நிற்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications