தமிழக சட்டசபையின் மரபை மாற்ற ஆளுநர் ரவி சதி! இந்தப் போக்கு ஏற்கத்தக்கதல்ல! -வைகோ
சென்னை: தமிழக சட்டசபையின் மரபை மாற்றகோரியது ஆளுநர் ரவியின் திட்டமிட்ட சதி என்றும் இந்தப் போக்கு ஏற்கத்தக்கதல்ல எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
இது நாள் வரை இலைமறை காயாக தமிழக அரசும், ஆளுநரும் மோதி வந்த நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மோதல் வெளிப்படையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது. கேரள ஆளுநர் பாணியில் உரையை முழுமையாக வாசிக்காமல் உரையில் இருக்கும் தகவல்கள் கள நிலவரத்துக்கும் உண்மைக்கும் புறம்பாக இருப்பதால் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஷாக் கொடுத்தார்.

ஆளுநர் ரவி இது போன்று செய்வார் என்பதை முன் கூட்டியே எதிர்பார்த்து காத்திருந்ததை போல் அரசுத் தரப்பிலும் ஆளுநர் அவையைவிட்டு வெளியேறியதற்கு பெரிதாக எந்த ரியாக்சனும் காட்டப்படவில்லை. ஆளுநர் ரவியின் இத்தகைய செயற்பாடு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ள நிலையில் வைகோவும் சில தரவுகளை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். அதன் விவரம் வருமாறு;
பெயர்களை தவிர்த்த ஆளுநர்: ''தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியபோது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார்.''
அநாகரிகமாக அவையில்: ''மேலும் திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், மதநல்லிணக்கம், பெண்ணுரிமை ஆகிய கொள்கைகள் இன்றைய அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன என்ற பத்தியை உரையில் இருந்து நீக்கிவிட்டு படித்தார். சட்டப்பேரவையில் நாட்டுப்பண் இசைக்கும்போதே அநாகரிகமாக அவையில் இருந்து எழுந்து வெளியேறினார். ''
திட்டமிட்ட சதி: ''அதைப்போலவே இந்த ஆண்டு இன்றையக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியபோதும், சட்டப் பேரவையின் மரபுக்கு எதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும் தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு ஆகும். ஆனால் ஆளுநர் அதனை மாற்றக்கோரியது திட்டமிட்ட சதியாகும்.''
சரியான போக்கு அல்ல: ''பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து அவைக்குறிப்பேட்டில் இடம்பெற செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக் கொள்ளதக்கதல்ல.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications