டெல்லி செல்லும் வானதி சீனிவாசன்.. தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் மாற்றமா? முனுமுனுக்கும் கமலாலயம்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை தொடர்ந்து, இன்று மாலை வானதி சீனிவாசனும் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது தெரிய வந்துள்ளது. பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கப்பட்ட நிலையில், திடீரென அவரை டெல்லி மேலிடம் அழைத்திருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தேசிய அளவில் பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அடுத்து வரும் உத்தரப் பிரதேசம் மாநில தேர்தலுக்கு ஏற்ப ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் தோல்விக்கு பின் பாஜக கப்சிப் மோடில் தான் இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவசர அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று தான் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த நிலையில், திடீரென நயினார் நாகேந்திரனை டெல்லி அழைத்திருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. நேற்று மாலை பாஜகவின் சீனியர் நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால் அமித்ஷா நேராக கோவளத்தில் இருந்து சென்னை விமான நிலையம் சென்று டெல்லிக்கு புறப்பட்டுவிட்டார்.
இதனால் தமிழக பாஜக நிர்வாகிகள் மீது அமித்ஷா அதிருப்தியில் இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. தற்போது நயினார் நாகேந்திரனை தொடர்ந்து பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசனும் இன்று மாலை டெல்லிக்கு புறப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழக பாஜகவின் இரு முக்கிய தலைவர்களையும் திடீரென டெல்லி மேலிடம் அழைத்திருக்கிறது.
அண்மையில் பாஜக தேசிய மகளிரணி செயலாளர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கப்பட்டிருந்தார். இதனால் வானதி சீனிவாசனுக்கு வேறு பதவி அளிக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதால், நயினார் நாகேந்திரனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி கிடைக்கும் என்ற பேச்சுகளும் அதிகரித்துள்ளன.
இதற்காகவே நயினார் நாகேந்திரனை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அழைத்துள்ளார் என்று கமலாலயத்தில் பேசப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரன் மத்திய இணையமைச்சராக நியமனம் செய்யப்பட்டால், தமிழக பாஜக தலைவர் பதவி வானதி சீனிவாசனுக்கு கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
