வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சுடச்சுட தோசை, பாயாசம்.. வீட்டு சாப்பாடு அதே ருசியில்.. சபாஷ் ரயில்வே
சென்னை: வந்தே பாரத் ரயில்களின் தேவையானது, பயணிகளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. இந்த ரயில் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். நாளுக்கு நாள் புது புது வசதிகளுடன், புது புது சலுகைகளுடன் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில் இப்போதும் ஒரு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. இது பயணிகளுக்கு மீண்டும் மகிழ்ச்சியை தரும்படியாக உள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
வந்தே பாரத் ரயில்கள் வேகமாகவும், நவீன வசதிகளுடன் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வருகின்றன.. இதில் சுத்தமான பாத்ரூம்கள், நிம்மதியான இருக்கைகள், Wi-Fi வசதி, கூல்டிரிங்க்ஸ் போன்ற வசதிகள் உள்ளன.

இதில் மற்றொரு வசதியாக உள்ளூர் உணவு வழங்கப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.. வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகள் வழங்க, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்..
வந்தே பாரத் ரயில் - உள்ளூர் உணவுகள்
அந்த அறிவிப்பில், "வந்தே பாரத் ரயில்களில், உள்ளூர் உணவுகள் வழங்க வேண்டும். உள்ளூர் உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது, பயணியரின் அனுபவத்தை மேம்படுத்தும். இதைத் தொடர்ந்து, படிப்படியாக அனைத்து ரயில்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் வகையில் பிராந்திய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. மராட்டியத்தின் காந்தா போஹா, ஆந்திராவின் கோவைக்காய் காரைப்பொடி வறுவல், கேரளாவின் பாலாடை பாயாசம், பரோட்டா என அந்தந்த பகுதி ரயில்களில் மெனுக்கள் மாற்றம் செய்துள்ளது.
பச்சப்பயிறு, வெள்ளை சாதம்
நாக்பூர்-செகந்திராபாத் வந்தே பாரத் ரயிலில், மகாராஷ்டிராவின் பிரபல உணவு காந்தா போஹா, தென்னிந்திய சுவை கொண்ட கோவைக்காய் காரப்பொடி வறுவல், ஆந்திரப்பிரதேசத்தின் ஆந்திர கோழிக்குழம்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.
கேரளா வழித்தடங்களில் இயக்கப்படும் காசர்கோடு-திருவனந்தபுரம் மற்றும் மங்களூர்-திருவனந்தபுரம் ரயில்களில், வெள்ளை சாதம், பச்சை பயறு பெரட்டி, கடலைக் கறி, கேரளா பரோட்டா, தயிர் மற்றும் பாலாடை பாயசம் போன்றவை வழங்கப்படுகின்றன. கேரளா உணவின் பாரம்பரிய சுவை மாறாமல் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.
மேற்கு வங்கம் ஆலு, பனீர்
மேற்கு வங்கத்தின் கோஷா பனீர், ஆலு படோல் பஜா, பீகாரின் சம்பாரண் பனீர், சம்பாரண் சிக்கன் போன்ற உணவுகளும் அந்தந்த ரயில்களில் கிடைக்கின்றன. மகாராஷ்டிராவின் மசாலா உப்புமா மற்றும் மேற்கு வங்கத்தின் முர்கிர் ஜோல் போன்றவை சில ரயில்களில் வழங்கப்படுகின்றன.
ஜம்மு-காஷ்மீர் வழித்தடங்களில், அம்பல் கடு, ஜம்மு சென்னா மசாலா, தக்காளி சமன், கேசர் ஃபிரினி போன்ற காஷ்மீர் சிறப்பு உணவுகள் பரிமாறப்படுகின்றன.
இட்லி, வடை சாம்பார்
நம்ம தமிழ்நாடு வழித்தடங்களில், இட்லி, வடை, சாம்பார், வெண் பொங்கல் மற்றும் தக்காளி சட்னி போன்ற உணவுகள் மெனுவில் இடம்பெற்றுள்ளன. மதிய உணவாக சாதம், காய்கறி கறி, சாம்பார் தயிர் போன்றவையும், டிபன் வகையில் பரோட்டா, வெஜ் பொருட்கள், டீ மற்றும் காப்பி வழங்கப்படுகின்றன.. இவையெல்லாம் வீட்டு சாப்பாடு போலவே தயாராகின்றன.
வந்தே பாரத் ரயில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியால், பயணிகள் அந்த மாநிலத்தின் கலாச்சார சுவையை அனுபவிக்க முடிகிறது. இதனால் இந்த முயற்சிக்கு வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் சமையல் பாரம்பரியத்தையும், தனித்துவத்தையும் கொண்டுள்ள நிலையில், அதன் தரம், சுவை, பாரம்பரியம், தனித்துவம் என எதுவுமே மாறாமல் ரயில்களில் வழங்கப்படுவது பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications