வந்தே பாரத்தை விடுங்க.. வரப்போகும் "வந்தே மெட்ரோ ரயில்" தேதி குறிச்சாச்சு.. வெளியான ஸ்வீட் அப்டேட்
சென்னை: குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களுக்கு இடையே வந்தே மெட்ரோ எனப்படும் புதிய ரயிலை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே எடுத்து வருகிறது. அந்த வகையில், புல்லெட் ரயில் போன்ற தோற்றம் கொண்ட வந்தே பாரத் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. எக்ஸ்பிரஸ் ரயில்களுடன் கூடுதல் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில்கள் முழுவதுமாக ஏசி வசதி கொண்டது ஆகும். அது மட்டும் இன்றி வைஃபை வசதி, தானியங்கி கதவுகள், பெரிய ஜன்னல்கள், பயோ டாய்லட்டுகள் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.
வந்தே பாரத் ரயிலில் ரயில் பெட்டியுடன் சேர்ந்தே என்ஜின் இருக்கும். நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் இரண்டு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை- கோவை மற்றும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு என மொத்தம் 2 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில் சென்னை - நெல்லை இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வந்தே பாரத் ரயில்களை போலவே குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களுக்கு இடையே வந்தே மெட்ரோ ரயிலை இயக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. 12 பெட்டிகளை கொண்டதாக இருக்கும் வந்தே மெட்ரோ ரயில்களும் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டதாகும். சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த ரயில் வரும் ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா தெரிவித்தார். அதேபோல், ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வந்தே பாரத் ரயில் (ஸ்லீப்பர்) பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
இது தொடர்பாக பிஜி மல்லையா கூறுகையில், " வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டிகள் அடுத்த நிதி ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும். தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார். வந்தே மெட்ரோ ரயில்கள் குறைந்த தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படும். வந்தே மெட்ரோ ரயில்கள் 100 கி.மீ. தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் எனத் தெரிகிறது.
முதலில் வந்தே மெட்ரோ ரயில் மும்பையில் இயக்கப்படும். இவை மும்பையின் உள்ளூர் ரயில்களின் ஒரு பகுதியாக இருக்கும். உள்ளூரில் உள்ள 238 ரயில்களை மேம்படுத்த ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. வந்தே மெட்ரோ ரயில்கள் அடிக்கடி சில நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும். தினந்தோறும் பயணம் செய்யும் பயணிகளுக்கு வந்தே மெட்ரோ பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications