ஒரே மேடையில் 11 கட்சிகள்! கன்னிராசி! தமிழகத்தில் ஜன 23 ல் பிரச்சாரத்தை தொடங்கிய மோடி! என்ன காரணம்?
சென்னை: ஜனவரி 23-ஆம் தேதி ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே கூட்டணி கட்சியினரை அழைத்து இந்த பிரச்சார கூட்டம் ஏன் தொடங்கப்பட்டது என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை உள்ளன.
கூட்டணிக்கு வராத கட்சிகள்
இந்த கூட்டணியில் தேமுதிக, ராமதாஸ் பாமக ஆகியவை இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல் தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளும் இணையும் என சொல்லப்படுகிறது.
வேல்முருகன் நிலைப்பாடு
இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருக்கிறது, கடந்த 2021 ஆம் ஆண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பண்ருட்டி எம்எல்ஏவாக வேல்முருகன் இருந்து வருகிறார். ஆனால் அவர் திமுகவுடன் பல்வேறு தருணங்களில் முரண்டு பிடித்ததால் அவர் கூட்டணியில் இருப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி
அது போல் நாம் தமிழர் கட்சி, தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தனித்து போட்டியிட்டு வருகிறது. அது போல் இந்த முறையும் அதே நிலைதான். விஜய்யின் தவெகவை எடுத்துக் கொண்டால் என்னதான் கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என விஜய் கூவி கூவி அழைத்தும் யாரும் கூட்டணிக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் அக்கட்சியும் தனித்தே போட்டி என சொல்லப்படுகிறது.
11 கட்சிகள்
இந்த நிலையில் அதிமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால் அதிமுகவில் பாஜக, புரட்சி பாரதம், ஐஜேகே மட்டும் இணைந்திருந்தது. அப்படியே சிறுக சிறுக தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இருந்து 11 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
- அதிமுக
- பாஜக
- பாமக (அன்புமணி)
- அமமுக
- தமாகா
- தமமுக (ஜான் பாண்டியன்)
- புதிய நீதிக் கட்சி (ஏசி சண்முகம்)
- புரட்சி பாரதம் (ஜெகன்மூர்த்தி)
- ஐஜேகே (பாரிவேந்தர்)
- பார்வார்டு பிளாக் (திருமாறன் ஜி)
- உழவர் உழைப்பாளர் கட்சி (செல்லமுத்து)
என 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மதுராந்தகம் கூட்டம்
இந்த நிலையில் இந்த 11 கட்சிகளுடன் மதுராந்தகத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அப்போது ஒரே மேடையில் 11 கட்சிகளின் தலைவர்களும் இருந்தனர். ஒவ்வொருவருடனும் மோடி கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
யார் யார் பங்கேற்பு
அது போல் அதிமுகவின் அடுத்த கட்ட நிர்வாகிகளான வேலுமணி, தங்கமணி, முனுசாமி உள்ளிட்டோரையும் நலம் விசாரித்தார். இந்க கூட்டத்தில் அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பேசினர். அதை தொடர்ந்து பிரதமர் மோடியும் பேசினார்.
கூட்டணி கட்சிகள்
அப்போது திமுகவை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படி தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே அதுவும் ஜனவரி 23-ஆம் தேதி கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வசந்த பஞ்சமி
இதற்கு காரணம் நேற்றைய தினம் வசந்த பஞ்சமி, அதிலும் வளர்பிறை பஞ்சமி. இந்த நாள் வடஇந்தியர்களுக்கு முக்கியமானது. இந்த நாளில் பணியை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கையாகும். இந்த நாளில் கல்வி பயிலத் தொடங்கினால் படிப்பில் மேம்படுவர் என்பது ஐதீகம். மேலும் இந்த நாளில் மஞ்சள் நிற ஆடை அணிவதையும் வட இந்தியர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கன்னி ராசிக்கும் நேற்றைய தினம் நல்ல நாள் என சொல்லப்படுகிறது. நாள் நட்சத்திரம் பார்த்து தொடங்கப்பட்ட இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications