விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் ED ரெய்டு! சென்னை போயஸ் தோட்டத்தில் பரபரப்பு
சென்னை: சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் துணையுடன் இந்த சோதனையானது நடந்து வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அது போல் அவருடைய மாமனார் லாட்டரி அதிபர் மார்ட்டினின் கோவை, சிக்கிம் மாநில வீட்டிலும் இந்த சோதனையானது நடந்து வருகிறது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, கடந்த பிப்ரவரி மாதம் விசிக துணை பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் விசிகவின் 'வெல்லும் சனநாயகம்' மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், விசிகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளம் வெளியிடப்பட்டது. இந்த இணையதளத்தை வடிவமைத்துக் கொடுத்தது ஆதவ் அர்ஜுனா தலைமையிலான Voice of Common குழுவினர்.
மேலும், Voice of Common நிறுவனர் ஆதவ் அர்ஜுனாவும், இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தளம் மூலமாக தன்னையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்த மாநாட்டின் மேடையிலேயே ஆதவ் அர்ஜுனை மேடையேற்றி அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார் விசிக தலைவர் திருமாவளவன்.
விசிகவின் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தது Voice of Common நிறுவனர் ஆதவ் அர்ஜுனா தான் என்றும், இந்த வெல்லும் சனநாயகம் மாநாட்டை ஒருங்கிணைத்ததும் ஆதவ் அர்ஜுனா தான் எனப் பெருமைப்படுத்திப் பேசி அவருக்கு உறுப்பினர் அட்டையையும் வழங்கினார் திருமாவளவன்.
இந்நிலையில், அம்பேத்கர் திடலில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது என அறிவித்துள்ளார் திருமாவளவன். லாட்டரி அதிபர் மருமகனுக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கூடைப்பந்து விளையாட்டு வீரர்: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதவ் அர்ஜுனா. இவர் சிறு வயது முதலே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டவர். கூடைப்பந்து விளையாட்டை சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக பல வெற்றிகளையும் குவித்துள்ளார். தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் என கூடைப்பந்து விளையாட்டுத் துறை சார்ந்த பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய கூடைப்பந்து சம்மேளன தேர்தலில் வெற்றி பெற்று இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ளார் ஆதவ் அர்ஜுனா.
வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வேறு யாருடனாவது கூட்டணி அமைக்க வேண்டும் என்ற ரீதியில் திமுகவுக்கு எதிராக ஆதவ் கருத்துகளை பகிர்ந்து வருவது விசிகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க ஆதவ் விரும்புகிறாரா என்பது குறித்தும் விசிகவில் சலசலப்பு எழுந்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் இந்த ஆதவ் அர்ஜுனா. மார்ட்டினின் மகள் டெய்சியின் கணவர் ஆவார். லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் போதெல்லாம், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications