விஜய்க்கு முட்டுக் கொடுத்தவர்கள் கூட..வெட்கித் தலைகுனியும் அளவிற்கு வீடியோ.. ஆளூர் ஷா நவாஸ்
சென்னை: விஜய்யிடம் அரசியல் கூர்மை இல்லை என்று தான் நினைத்தோம். அவர் வெளிவர வெளிவரத் தான், துளி கூட அவரிடம் அரசியல் நேர்மை இல்லை என்பது அம்பலமாகிறது. மூன்று நாட்களாக முக்கி முக்கி விஜய்க்கு முட்டுக் கொடுத்தவர்கள் கூட, வெட்கித் தலைகுனியும் அளவுக்கு விஜயின் ஒற்றை வீடியோ அமைந்து விட்டது. பிரச்சனை என்ற உடன் வழக்கமாக மன்னிப்பு கேட்டு எஸ்கேப் ஆவார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். விஜய் அதில் மட்டும் மாறுபட்டு மன்னிப்பு கேட்காமல் எஸ்கேப் ஆகிறார் என்று ஆளூர் ஷா நவாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார்.
நடிகர் விஜய் மூன்று நாள் கழித்து விளக்க வீடியா வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் தான் வீடியோ இருந்தது. அதில் அவர் கூறும் போது, "கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.

எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதைத் தவிர நாங்கள் வேறேதும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தோழர்கள், நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் போட்டு கைது செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தோரையும் கைது செய்கிறார்கள்.
சிஎம் சார் உங்களுக்கு என்னை ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். இல்லாவிட்டால் ஆஃபீஸில் இருப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் விசிக துணை பொதுச் செயலாளரும் நாகை எம்எல்ஏவுமான ஆளூர் ஷா நவாஸ் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "விஜய்யிடம் அரசியல் கூர்மை இல்லை என்று தான் நினைத்தோம். அவர் வெளிவர வெளிவரத் தான், துளி கூட அவரிடம் அரசியல் நேர்மை இல்லை என்பது அம்பலமாகிறது.
"திட்டமிட்ட நாளில் வராமல் திடீரென கரூர் வந்தது, குறித்த நேரத்தில் வராமல் மிகமிக தாமதித்தது, குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக கூட்டத்தை வரவைத்தது, கூடிய மக்களுக்கு குடிக்க தண்ணீர் ஏற்பாடு கூட செய்யாதது, நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல் குழந்தைகள் பெண்களை திரட்டியது, போலீஸ் எச்சரித்தும் கேட்காமல் கூட்டத்தில் புகுந்தது, ஜெனரேட்டர் பகுதியை சூறையாடியது, ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியது, பிரச்சனை என்ற உடன் ஓடி ஒளிந்தது, மக்களை சந்திக்காமல் கட்சி கட்டமைப்பே கள்ள மெளனம் காத்தது" என்று ஓராயிரம் பிழைகள் செய்தும், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மட்டுமல்ல, முதலமைச்சருக்கு சவால் விட்டு சண்டைக்கும் இழுக்கிறார் விஜய்.
மூன்று நாட்களாக முக்கி முக்கி விஜய்க்கு முட்டுக் கொடுத்தவர்கள் கூட, வெட்கித் தலைகுனியும் அளவுக்கு விஜய்யின் ஒற்றை வீடியோ அமைந்துவிட்டது. பொய் சொல்வதில், புரட்டு பேசுவதில், வன்மத்தை உமிழ்வதில், போகிற போக்கில் அடித்து விடுவதில், எதற்கும் பொறுப்பேற்காமல் கல் மனதுடன் வெளிப்படுவதில், அண்ணாமலையையும் RN.ரவியையும் பின்பற்றுகிறார் விஜய் என்று அன்றே சொன்னேன். அதை நாளும் நிரூபிக்கிறார் விஜய்.
விஜய், பக்காவான ஆர்எஸ்எஸ் பாஜக மெட்டீரியல் என்பது தெளிவாகிறது. பிரச்சனை என்ற உடன் வழக்கமாக மன்னிப்பு கேட்டு எஸ்கேப் ஆவார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். விஜய் அதில் மட்டும் மாறுபட்டு மன்னிப்பு கேட்காமல் எஸ்கேப் ஆகிறார்" இவ்வாறு ஆளுநர் ஷா நவாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications