பெண்களை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதி நூல் இதுதான்..தமிழகம் முழுவதும் மக்களுக்கு இலவசமாக கொடுத்த விசிக!
சென்னை: பெண்கள் மற்றும் சூத்திரர்களை மனுஸ்மிருதி என்ற நூல் எப்படி எல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அதை ஒரு நூலாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.
மனுஸ்மிருதி என்பது இந்துத்துவா சித்தாந்தங்களை பேசக் கூடியது. இதில் வர்ண பேதங்கள், ஆண் பெண் என்கிற பாலின பேத கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

சபலபுத்தி பெண்கள்
பெண்களை சபல புத்தி கொண்டவர்கள், பெண்கள் எப்போதும் ஆண்களின் கண்காணிப்பின் இருக்க வேண்டும் என இழிவுபடுத்தக் கூடிய கருத்துகளைக் கொண்டிருக்கிறது. சூத்திரர்கள் என்பவர் விபச்சாரிகளின் மகன் என்கிற கருத்தை வலியுறுத்துகிறது மனுஸ்மிருதி. ஆகையால் மனுஸ்மிருதிக்கு எதிராக தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பேசினர். மனுஸ்மிருதி எரிப்பு போராட்டங்களை நடத்தினர்.

ஆ.ராசாவின் மனுஸ்மிருதி பேச்சு
திமுக மூத்த தலைவர் ஆ.ராசா அண்மையில், இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்;இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.

மனுஸ்மிருதி விவாதம்
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மனுஸ்மிருதி நூல் குறித்து விவாதங்கள் எழுந்தன. பாஜக மற்றும் இந்துத்துவா தரப்பினரைப் பொறுத்தவரை வழக்கில் இல்லாத மனுஸ்மிருதியை ஏன் பிடித்து தொங்குகிறீர்கள் என்பது கேள்வியாக இருந்தது. ஆனால் மனுஸ்மிருதியின் அடிப்படையில்தான் இந்துத்துவா பேசப்படுகிறது என்பது எதிர்தரப்பு வாதமாக இருந்தது.

திருமாவளவனின் அதிரடி அறிவிப்பு
இந்நிலையில் நவம்பர் 6ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதிகளை அச்சிட்டு மக்களுக்கு வினியோகம் செய்ய இருக்கிறோம் என அறிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். மேலும் மனுஸ்மிருதியை நமது பெண்கள் படிக்க வேண்டும். பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் காரணமான உளவியலுக்கு அடிப்படை மனுஸ்மிருதி. பெண்களை சபலப் புத்தி கொண்டவர்கள் என்கிறது மனுஸ்மிருதி. அதனால் ஆண், கணவர் கண்காணிப்பில் பெண் இருக்க வேண்டும் என்கிறது. பிராமணர் பெண் உள்ளிட்ட அனைத்து சமூகப் பெண்களையும் இப்படித்தான் குறிப்பிடுகிறது மனுஸ்மிருதி. அதன் உண்மை முகத்தை மக்கள் அறிய வேண்டும. ஆகையால் ஒரு லட்சம் மனுஸ்மிருது நூல் பிரதிநிதிகளை அச்சிட்டு மக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம் என அறிவித்தார்.

ஒரு லட்சம் மனுஸ்மிருதி நூல்கள் விநியோகம்
இதனடிப்படையில் இன்று தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனுஸ்மிருதி நூல் இலவசமாக வழங்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் பொதுமக்களுக்கு தொல். திருமாவளவன் வழங்கினார். ஓசூரில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விநியோகித்தார். பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சில இடங்களில் விசிக மற்றும் பாஜகவினர் கைதும் செய்யப்பட்டனர்.

திருமாவளவன் விளக்கம்
சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இந்து சமுதாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க இந்துக்கள் நலன்களுக்காக
விழிப்புணர்வு ஏற்படுத்த மனுஸ்மிருதி நூலை வழங்கினோம். அம்பேத்கரும் மனுஸ்மிருதியை எரித்திருக்கிறார். தமிழகத்தில் பாஜக இருக்கிறதே.. பிறகு ஏன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இங்கே தேவை? நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க முடியாமல் ஆர்.எஸ்.எஸ். பின்வாங்கி விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications