சிந்தனை செல்வன் கடும் அதிருப்தி.. சிந்திக்கும் ஒருவனுக்கு எதிராக 1,000 முட்டாள்! தோல்வியடைந்த சமூகம்
சென்னை: விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் அவரின் எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறது. சிந்தனையோடு உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, முட்டாள்தனமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும் என்று பதிவிட்டதன் பின்னணி என்ன என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த நாளில் இருந்தே அமைச்சர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ஆதவ் அர்ஜுனா, ரமேஷ், சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் சட்டசபையிலேயே பொய்யாக பல்வேறு விஷயங்களை பேசுவதும், அதனை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

தவெக அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்ற கட்சியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக விசிகவில் இருக்கும் பல்வேறு நிர்வாகிகளும் தவெக மீது அதிருப்தியில் இருக்கின்றனர். ஏற்கனவே ஆளூர் ஷா நவாஸ் வெளிப்படையாகவே தவெகவை விமர்சித்து வருகிறார். தற்போது அந்தப் பட்டியலில் விசிக பொதுச் செயலாளர் சிந்தனை செல்வனும் இணைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் சிந்தனை செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில், "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்: தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்..
சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.. அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்.. எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்..
- ஆண்டன் செக்கோவ்" என்று பதிவிட்டுள்ளார். திமுக உடனான கூட்டணியில் இருந்து விசிக விலகி வந்து தவெக உடன் கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி நடக்கவுள்ள சூழலில், சிந்தனை செல்வன் இப்படியொரு பதிவை எழுதி இருக்கிறார். இதனால் சிந்தனை செல்வன் அதிருப்தியில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
