"NO.1".. மகத்தான அறிவிப்பு.. நீக்கப்பட்ட "சாதி".. வீடியோ போட்ட விசிக ரவிக்குமார்.. ஸ்டாலினுக்கு சபாஷ்
அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மேற்பார்வையில் வரும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: அனைத்து பள்ளிகளும், இனி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மேற்பார்வையில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுஒரு மகத்தான அறிவிப்பு என்று திமுக அரசுக்கு விசிக பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் 2023 - 24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது... இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார்.
அதில், மிக முக்கியமானது, பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகும்.. மற்ற எந்த துறையையும்விட, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவிலான நிதியை தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

சிக்கல்கள்
குறிப்பாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சீர் மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறைகீழ் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு தரப்பினர் வரவேற்று வருகின்றனர்.. காரணம், ஆதி திராவிடர் மற்றும் சீர் மரபினர், சமூகத்தில் பாகுபாடு காட்டப்பட்டு பொதுப் பள்ளிகளில் சேர்ந்து பயில முடியாத சூழலில், அவர்களுக்கு என்று தனியாக பள்ளிகள் உருவாக்கப்பட்டன. ஆதி திராவிட நல விடுதியில் தங்கி, படிக்கும் இத்ததகைய மாணவர்களுக்கு உளவியல்ரீதியாக சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், சாதிப் பெயர்களில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி வேற்றுமையை இது ஏற்படுத்தும்..

சமூக நலப்பள்ளி
ஒரு சாதியைவிட மற்ற சாதியினர் பெரியவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்றெல்லாம் கவலைகள் படர்ந்து வந்தன.. அதனால்தான், இந்த விவகாரத்தை விசிக மிக தீவிரமாக கையில் எடுத்தது.. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள சாதி பெயர் அடையாளங்களை நீக்குவதுடன், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியின் பெயரை சமூக நல பள்ளி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதிகளை மிகச் சிறந்த கட்டமைப்பு கொண்டதாக மாற்ற வேண்டும் என்றும் அக்கட்சி சார்பில் பல வருடங்களாகவே கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், ஆதி திராவிட நலப் பள்ளிகளை "சமூக நலப் பள்ளிகள்" என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அக்கட்சி தலைவர் திருமாவளவனும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தபடியே இருந்தார்..

எழுச்சி தமிழர்
அதில், "அரசு நடத்தும் பள்ளிகளின் பெயர்களில், சாதி பெயர்களை அகற்ற வேண்டும், எல்லா பள்ளிகளையும், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக முன்வைத்து வருகிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, எங்கள் தலைவர், எழுச்சி தமிழர் அவர்கள், மாண்புமிகு முதல்வரிடத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தினார்.. அதுபோலவே, நானும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வருகிறேன். இந்த கோரிக்கை இன்றைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

பூரிப்பு
மாண்புமிகு முதல்வர் அவர்களால், இந்த நிதி நிலை அறிக்கையில் அனைத்து பள்ளிகளும், இனி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மேற்பார்வையில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இது ஒரு மகத்தான அறிவிப்பு.. பள்ளிக்கல்வித்துறை மேலும் சிறப்பாக செயல்பட இது வழிவகுக்கும்.. அதுபோலவே நம் மாநிலத்தின் பள்ளிக்கல்வித்தரத்திலே மேம்பாடு, முன்னேற்றத்தை இது கொண்டுவரும் இந்த அறிவிப்பை செய்திருக்கின்ற மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விசிக தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது" என்று ரவிக்குமார் பூரித்து அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்றைய தினம் தமிழக பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தாலும், "நம்பர் 1" அறிவிப்பு இதுதான் என்று சோஷியல் மீடியாவில் கமெண்ட்களை இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications