பெரிய மேட்டரை தொட்ட திருமா..வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கும் விசிக! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட்டுவிட்டு வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட்டு மீண்டும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதைபோன்றே வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பில், "2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கி வருகிறது.

 VCK protest today against Voter machine in 2024 lok sabha election

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சுமார் 150 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள் இல்லாமல், முறையான விவாதமும் நடத்தாமல் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை ஃபாசிச பாஜக அரசு இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றி இருக்கிறது. அதில் ஒரு சட்டம், தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பானதாகும்.

தலைமைத் தேர்தல் ஆணையரை - இந்திய பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் கொண்ட குழு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை மாற்றும் விதமாக இந்திய பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் என்றும்; அந்தக் குழுவில் மூன்றில் இரண்டு பேர் கருத்து பெரும்பான்மையாகக் கருதப்பட்டு அதன் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும் ஒரு சட்டத்தை இப்போது ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் ஆளுங்கட்சி சார்பான ஒருவரே தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், இனி நியாயமான தேர்தல் இந்தியாவில் நடக்குமா என்ற ஐயம் எழும்பியிருக்கிறது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் உள்ளிட்ட பல சட்ட வல்லுனர்கள், 'இந்த சட்டத்தின் காரணமாக இந்தியாவில் நியாயமாகத் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை குலைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்தல் முறை மீது ஏற்கனவே மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.

இப்போது தேர்தல் ஆணையமும் ஆளுங் கட்சிக்கு சார்பாக மாற்றப்பட்டு விட்டது. இந்தச் சூழலில் 2024 பொதுத்தேர்தல் நேர்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கை முற்றாகத் தகர்ந்து விட்டது. எனவே 2024-பொதுத் தேர்தலை இப்போதுள்ள நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் நடத்தக்கூடாது. மாறாக, 100 சதவீத வாக்குப் பதிவு எந்திரங்களும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரத்தோடு இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் தாமளிக்கும் வாக்குக்கு ஒப்புகை சீட்டைப் பெற்று அதை சரி பார்த்து, வேறு ஒரு பெட்டியில் இட வேண்டும்.

தேர்தல் முடிவானது அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதன் அடிப்படையிலேயே அறிவிக்கப்பட வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட இவ்விரண்டு கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்திய ஒன்றிய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வரும் திசம்பர் 29 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் பங்கேற்று இந்த அறப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு பங்கேற்றார். இதேபோல் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+