6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின்
சென்னை: திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே இழுபறிக்கு பிறகு இன்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் சட்டசபை தேர்தலில் விசிகவிற்கு 8 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர். இந்த 8 தொகுதிகளில் 2 பொதுத்தொகுதிகளும் அடங்கும்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு எளிமையாக முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின. இருப்பினும் ஒவ்வொறு கட்சியையும் திறமையைாக திமுக சமாளித்து கூட்டணியில் தக்க வைத்து வருகிறது.

அந்த வகையில் கூடுதல் தொகுதி கேட்டு பிடிவாதம் பிடித்த காங்கிரஸ்க்கு 28 சீட், ஒரு ராஜ்யசபா வழங்கப்பட்டது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் கூடுதல் தொகுதிகள் கேட்டாலும் திமுக பிடிகொடுக்கவில்லை. இறுதியாக கடந்த முறையை விட இருகட்சிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியை குறைத்து தலா 5 சீட்டுகளை வழங்கி உள்ளது.
திமுகவால் வருத்தப்பட்ட திருமா
அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கும்படி திமுகவிடம் கோரிக்கை வைத்தது. மேலும் முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது கடந்த முறை 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை இரட்டை இலக்கத்தில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் திமுக அதற்கு உடன்படவில்லை.
திருமாவளவனிடம், முதல்வர் ஸ்டாலினே முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். இந்த முறை கூட்டணியில் கூடுதல் கட்சிகள் வந்துள்ளன. இதனால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் திருமாவளவன் தனது வருத்தத்தை வீடியோ மூலமாகவும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் வாயிலாகவும் தெரிவித்து இருந்தார்.
திமுக - விசிக தொகுதி பங்கீடு
இதற்கிடையே தான் நேற்று விசிகவின் உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் திருமாவளவன் சார்பில் நடந்தது. அந்த கூட்டத்தில் விசிகவிற்கு இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகள் ஒதுக்க வேண்டும். 2028 ல் ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இது தற்போது முக்கிய கவனம் பெற்றுள்ளது.
இப்படியான சூழலில் தான் இன்று முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
6 + 2 தொகுதிகள்
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திருமாவளவன் - ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த 8 தொகுதிகளில் 2 பொதுத்தொகுதிகளும், 6 தனித்தொகுதிகளும் அடங்கும்.
இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதி வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் பிடிவாதம் பிடித்த நிலையில் திருமாவளவின் மனதை முதல்வர் ஸ்டாலின் கரைத்து வெற்றி கண்டுள்ளார். இதன்மூலம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தப்படியாக விசிகவிற்கு தான் அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
8 தொகுதி வழங்கியதன் பின்னணி
முன்னதாக கடந்த சட்டசபை தேர்தலில் விசிகவிற்கு 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 4 இடங்களில் விசிக வெற்றி பெற்றது. 2 இடங்களில் தோல்வியை சந்தித்தது. மேலும் கடந்த முறை விசிக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லை.
ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 2 இடங்களிலும் விசிக வெற்றி பெற்றது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விசிக மாறிய நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் 6 தனித்தொகுதி + 2 பொதுத்தொகுதி என மொத்தம் 8 தொகுதிகளில் விசிக களமிறங்க உள்ளது.












Click it and Unblock the Notifications