ஆதவ(ன்) மறைவதில்லை..பஞ்ச் வைத்து பேசிய ஆதவ் அர்ஜுனா? விசிக திருமா? தவெக விஜய்? எந்த கட்சிக்கு டிக்?
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளரான ஆதவ் அர்ஜுனா தற்போது ஆறு மாதங்களுக்கு அந்த கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருமாவளவன் நேற்று அறிவித்த நிலையில், ஆதாவ் அர்ஜுனாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகனான ஆதவ் அர்ஜுனா அரசியல் துறையில் பட்டம் பெற்றவர். தொடர்ந்து தேர்தல் வியூக நிறுவனங்களை நடத்தி வந்தார். வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்திற்கு முன்னதாகவே ஒன் மைண்ட் இந்தியா நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

2014ஆம் ஆண்டிலிருந்து திமுகவுக்காக பணியாற்றி வந்திருக்கிறார். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்ட போது அதில் ஆதவ் அர்ஜுனாவின் பங்கு முக்கியமானது என கூறப்படுகிறது.
2016 தேர்தல் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் தொடர்ந்து கிராம சபை கூட்டம் உள்ளிட்ட திமுகவின் பல்வேறு நிகழ்வுகளில் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒன் மைண்ட் இந்தியா நிறுவனம், வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனமாக மாறியது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பணியாற்றிய அவர், பிரசாந்த் கிஷோரை வியூக பணிகளுக்காக அழைத்து வந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. இப்படியாக திமுக தலைமைக்கு நெருக்கமாக இருந்த அவர் அதற்கு பிறகு நேரடியாக அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற தகவல் பரபரப்பை கிளப்பியது.
திமுகவில் தான் அவர் இணைவார் என கூறப்பட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் சேர்ந்த உடனேயே அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. மேலும் கட்சியின் மாநாடுகள், நிகழ்ச்சிகள், சமூக வலைதள பக்கங்களின் கட்டுப்பாடு என முழுவதும் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. அது மட்டுமல்லாமல் மது ஒழிப்பு மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார் அர்ஜுனா.
இப்படியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அவருக்கு திடீர் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது மூத்த சில நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இரண்டு மூன்று மாதங்கள் வரை அமைதியாக இருந்து அவர் திடீரென ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசியது திமுக நிர்வாகிகளை கோபத்தில் ஆழ்த்தியது. திருமாவளவன் தானும் அதற்கு தான் அரசியலுக்கு வந்தேன் என பேசினாலும், கட்சியில் இருந்த எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக கிளம்பினர்.
தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோஷம் பல கட்சிகளை பேச வைக்க திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. அதற்கு அடுத்த பிரச்சனையாக எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா அமைந்தது. அதில் திருமாவளவன் உடன் ஒரே மேடையை விஜய் பகிர்ந்து கொள்கிறார் என்ற தகவல் அரசியலில் பேசுபொருளானது. திருமாவளவன் கலந்து கொள்வாரா இல்லையா என்ற கேள்விக்கு நிகழ்ச்சி நடைபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பு தான் விடை கிடைத்தது. தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என திருமாவளவன் அறிவித்தார். ஆனால் அர்ஜுனா கலந்து கொண்டார்.
அதுதான் தற்போது அவர் கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட காரணமாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும், ஒரு குடும்பம் திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என நேரடியாக திமுகவை விமர்சித்து பேச விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பினார். இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திருமாவளவனால் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
அறிக்கை மூலம் அதனை திருமாவளவன் உறுதி செய்ய, அதற்கு அறிக்கை மூலமாக பதில் கொடுத்து இருக்கிறார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவ் மறைவதில்லை என இறுதியாக பஞ்ச் வைத்து பேசியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேரப் போகிறார் என்ற தகவல்களும் உலாவி வருகிறது. அதற்கு முன் திமுக கூட்டணியில் பத்தோடு பதினொன்றாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திடீரென இவ்வளவு ஊடக வெளிச்சம் கிடைக்க ஆதவ் அர்ஜுனா முக்கிய காரணம் என்பதை திருமாவளவன் உணர்ந்திருந்தார்.
அதனால் தான் அவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது. ஆனால் சக கட்சி நிர்வாகிகளை எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி ஆதவ் அர்ஜுனாவை இடநீக்கம் செய்ததாக கூறுகின்றனர் விசிக நிர்வாகிகள். அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைய இருப்பதாகவும் தகவல் உலாவுகிறது. ஏற்கனவே விஜய் மீது ஊடக வெளிச்சம் அதிகமாக இருக்கும் நிலையில் ஆதவ் அர்ஜுனா சேர்வது கூடுதல் பலமாக இருக்கும் என அந்த கட்சி தலைமை நம்புகிறது. எனவே விரைவில் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் எனவும், இதற்காக திரை மறைவு பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அரசியலில் அனுபவம் இல்லாமல் இருந்தாலும், தேர்தல் அரசியல், பகுப்பாய்வில் மிகுந்த நிபுணத்துவம் கொண்டவர் ஆதவ். எனவே எடுத்த எடுப்பிலேயே விஜய் கட்சியில் சேர மாட்டார். இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து அதற்குப் பிறகு தனது முடிவை அறிவிப்பார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications