தள்ளுவண்டி காய்கறி வியாபாரிக்கு ரூ.31 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ்.. பின்னணியில் ரூ.7.50 கோடி வர்த்தகம்
சென்னை: தள்ளுவண்டியில் காய்கறி விற்று வாழ்க்கை நடத்தும் ஒருவருக்கு ரூ.31 லட்சம் ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் அவர் செய்யாத ரூ.7.50 கோடி பிசினஸுக்காக இப்படியொரு நோட்டீஸ் வந்துள்ளது என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்... வேலூர் மாவட்டத்தில் காய்கறி வியாபாரம் செய்யும் வசீமுக்கு இப்போது அப்படியொரு அதிர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாகவே ஏழை மக்களின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கூலித் தொழிலாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி போலி நிறுவனங்களை உருவாக்கி, அவர்கள் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடந்ததாக கணக்கு காட்டப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இதனால், எந்த தொழிலும் செய்யாத சாமானியர்கள் கூட ஜிஎஸ்டி வரி பாக்கி பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றனர்.

ரூ.31 லட்சம் ஜிஎஸ்டி வரி பாக்கி
வேலூர் மாவட்டம் தரணம்பேட்டையைச் சேர்ந்தவர் வசீம். 36 வயதான இவர் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். இவரிடம் கடந்த மாதம் சிலர் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய வசீமிடம் பான் நம்பர், வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளனர். மேலும், அவரது செல்போனுக்கு வந்த ஓடிபி நம்பரையும் வாங்கியுள்ளனர்.
இதன்பிறகு நவம்பர் 12-ம் தேதி ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து வசீமுக்கு ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில், ரூ.7.50 கோடிக்கு வசீம், வர்த்தகம் செய்துள்ளதாகவும், அதற்காக ரூ.30 லட்சத்து 92 ஆயிரம் ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை
தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வரும் தனக்கு 7.50 கோடி ரூபாய்க்கு, இவ்வளவு பெரிய பிசினஸா? என்று ஆடிப்போனார் வசீம்.. தனக்கும், இந்த வர்த்தகத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று வசீம் தெரிவித்துள்ளார். உடனடியாக குடியாத்தம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தர சென்றார்.. ஆனால், வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு அங்குள்ள போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்..
இதையடுத்து தன்னை ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வசீம் கோரிக்கை விடுத்துள்ளார். லட்சக்கணக்கில் வரி கட்ட வேண்டும் என்று அனுப்பப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி நோட்டீஸ் குறித்து உரிய விசாரணை நடத்தி, உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்றும் வசீம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வசீம் பொறுத்தவரை மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்தந்தவர்.. குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வசீம். இவரது பெற்றோர் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்களாம்.. குடும்பத்துக்கு வருமானம் போதவில்லை என்பதற்காக, தள்ளுவண்டியில் தெருத்தெருவாக சென்று காய்கறி விற்பனை செய்து வருகிறாராம் வசீம்.. இப்போது இந்த ஜிஎஸ்டி தொகையை பார்த்து, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது.
ஜோலார்பேட்டை ருக்மணி
வசீமுக்கு மட்டுமே இப்படியான பாதிப்பு ஏற்படவில்லை.. சமீபத்தில், இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த 56 வயது பெண் ருக்மணியும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார்.
ருக்மணி 125 நாள் வேலைத் திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்று வருகிறார். தினக்கூலி வேலை செய்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வரும் இவருக்கு, "ஆர்.எம். டிரேடர்ஸ்" என்ற நிறுவனத்தின் பெயரில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை நடத்தி சுமார் ரூ.2.79 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வணிகவரித்துறை உத்தரவு வந்தது. இதன் காரணமாக ருக்மணியின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது.
தான் எந்த நிறுவனமும் நடத்தவில்லை என்றும், ஏரி வேலைக்குத்தான் சென்று வருவதாகவும் கூறி ருக்மணி கண்ணீருடன் தனது நிலையை வெளிப்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்..
வசீம், ருக்மணி பரிதாபம்
இப்படி, வசீம், ருக்மணி போல நிறைய பேர், இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.. தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் சாதாரண மக்களின் அடையாள ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால், அவர்கள் செய்யாத தொழிலுக்கும் வர்த்தகத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏழை மக்களிடம் இருந்து அவர்களுடைய ஆவணங்களை சிலர் நைசாக பேசி வாங்கி விடுகிறார்கள்.. பிறகு அந்த ஆவணங்களை பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் போலி நிறுவனங்களை தொடங்குவதாக புகார்கள் எழுகின்றன.
அந்த நிறுவனங்கள் பெயரில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்ததாகக் கணக்கு காட்டி, கடைசியில் வரி பாக்கி நோட்டீஸையும் அவர்களுக்கே அனுப்புகின்றனர். இதனால், தாங்கள் செய்யாத தொழிலுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும் என்று தெரியாமல் பலரும் தவிக்கின்றனர்.
ஜிஎஸ்டி வரியால் பாதிப்பு
ஏற்கனவே குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் இவர்களால், இந்தப் பிரச்சினைக்காக அலைந்து திரிவதும், வழக்கறிஞர்களை வைத்து போராடுவதும் எளிதான காரியம் அல்ல. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் விரைவாக தீர்வு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
எனவே, ஏழை மக்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களை தொடங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் செய்யாத தவறுக்காக வரி பாக்கி செலுத்த வேண்டிய நிலை ஏற்படாமல், அவர்களுடைய புகார்களை அதிகாரிகள் விரைவாக விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அலர்ட்
அதேபோல பொதுமக்களும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி யாராவது பான் எண், வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டால் உடனே கொடுக்கக் கூடாது. குறிப்பாக, செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை யாரிடமும் ஷேர் செய்யக்கூடாது, சொல்லவும் கூடாது.
வேலைக்கான பதிவு என்று சொல்லி, ஆவணங்களை கேட்டாலும், எதற்காக அவை தேவைப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொண்ட பிறகே கொடுக்க வேண்டும்.,. ஒருவேளை தங்களுடைய ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக தெரிந்தால் உடனடியாக வங்கி, போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்.
ஒருபுறம் தினமும் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை. இன்னொரு பக்கம் தாங்கள் செய்யாத கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகத்துக்கு வரி பாக்கி செலுத்த வேண்டிய நெருக்கடி. வசீம், ருக்மணி போன்ற சாமானியர்கள் இத்தகைய மோசடிகளில் இருந்து எப்போது பாதுகாக்கப்படுவார்கள் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.


Click it and Unblock the Notifications
