இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..விஜய் கொடி கலர் எங்களோடது! சீனுக்குள் வந்த வெள்ளாளர் முன்னேற்ற கழகம்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கட்சியின் கொடியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பனையூரில் வெளியிட்டார். இந்நிலையில் கட்சியின் கொடி, யானை சின்னம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், கொடியின் நிறம் தங்கள் அமைப்பின் கொடியைப் போல் இருப்பதாக புகாரை அடுக்கி உள்ளார் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் தலைவரான அண்ணா சரவணன்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்து வைத்தார் நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய்.

மஞ்சள், சிவப்பு நிறங்களோடு இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்று இருப்பது போலவும் பச்சை நீல நட்சத்திரங்களும் அந்த கொடியில் இடம் பெற்று இருந்தன.
இந்த நிலையில் கட்சிக்கொடி வெளியான சில நிமிடங்களிலேயே ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அது வேகமாக பரவியது. மேலும் கட்சியின் பாடலையும் விஜய் வெளியிட்டார் .இந்த நிலையில் கட்சியின் கொடி ஸ்பெயின் நாட்டு கொடியை போல இருப்பதாகவும் கேரளா அரசின் சின்னத்தில் இருப்பது போல இரண்டு யானைகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
மேலும், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற பாடலான 'நான் அடிச்சா தாங்க மாட்ட' பாடலின் ரீமிக்ஸ் போல கட்சியின் பாடல் இருப்பதாக விமர்சனங்கள் இருந்தது. இது மட்டுமல்லாமல் மட்டும் அல்லாமல் தங்கள் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை விஜய் கட்சி கொடியில் பயன்படுத்தியதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்படியாக கொடி வெளியானது தொடங்கி இன்று வரை சமூக வலைத்தளங்களில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில், கொடியின் நிறம் தங்கள் அமைப்பின் கொடியைப் போல் இருப்பதாக புகாரை அடுக்கி உள்ளார் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் தலைவரான அண்ணா சரவணன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நடிகர் விஜய் அவர்களின் கட்சிக் கொடியை மாற்ற வேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டு, வெள்ளாளர் முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் வளர்ந்து வரும் எங்கள் கட்சி, முறைப்படி பத்திர பதிவுத்துறையில் இயக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் இயக்கத்தின் கொடியாக, மேலும், கீழும் சிவப்பு வண்ணமும்; நடுவில் மஞ்சள் வண்ணமும் இருக்கும். இதை எங்கள் நிகழ்வுகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளார். சமீபத்தில் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தினார்.
அது அப்படியே எங்கள் இயக்கத்தின் கொடியாக உள்ளது. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். நடிகர் விஜய் கட்சி துவங்கியதற்கும், கொடி அறிமுகம் செய்ததற்கும் இடையே 2 ஆண்டுகள் இடைவெளி இருந்தது. இந்த நேரத்தில், கட்சி கொடி, வண்ணம், சின்னம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். எத்தனையோ வண்ணங்களும், சின்னங்களும் இருக்கையில், ஏற்கனவே பயன்படுத்தி வருபவற்றை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதனால் கட்சி கொடி வண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். எங்கள் அமைப்பு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கொடியை பயன்படுத்தி வருகிறோம். விஜய் தன் கட்சி கொடியின் வண்ணத்தை மாற்ற வேண்டும். இல்லையென்றால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications