வேலூரில் "வேர்" விடும் தாமரை.. முஸ்லீம் ஓட்டுக்கு பாஜக குறி.. ஏ.சி.சண்முகத்துக்கு திமுகவே குறி.. பலே
சென்னை: திமுக ஒருபக்கம், அதிமுக மறுபக்கம் என இரு ஜாம்பவான் கட்சிகளுக்கு நடுவே, தாமரையோடு வேலூருக்கு வருகிறார் புதிய நீதி கட்சியின் ஏ.சி. சண்முகம்.
கடந்த முறை எம்பி தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் போட்டியிட்டு, அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் சொற்ப வாக்குகளில், வெற்றியை பறிகொடுத்தவர் ஏ.சி.சண்முகம்.. அப்போது இந்த தோல்வியை அவரால் கொஞ்சம்கூட ஜீரணிக்கவே முடியவில்லை.

பெருத்த கவனம்: இத்தனைக்கும் இவரது பிரச்சாரம், கடந்த தேர்தலின்போது இஸ்லாமியர் சமுதாயத்தினரிடம் பெரும் கவனத்தை பெற்றிருந்தது.. அதனால்தான், இந்த முறை தேர்தலில் வென்றே தீருவது என சபதம் எடுத்துள்ளார்.. அதுவும் ஒரு வருடத்துக்கு முன்பேயே சபதம் போட்டுவிட்டார் .
இந்த முறையும் வேலூர் தொகுதியின் இஸ்லாமியர்களின் வாக்குகள் தன்பக்கம் திரும்பும் என்றும் உறுதியுடன் நம்பியே, தேர்தலுக்கான வேலையையும் கடந்த வருடமே ஆரம்பித்துவிட்டார் ஏசி சண்முகம்..
கல்வி நிறுவனம்: ஆனால், அதிமுகவிடம் கூட்டணி வைப்பார் என்றே கடைசிவரை எதிர்பார்க்கப்பட்டது. திடீரென பாஜக பக்கம் தாவியிருக்கிறார். இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. கல்வி தந்தைகளாக அறியப்படும் ஜெகத்ரட்சகன், பாரிவேந்தர் எல்லாம் எம்.பியாகி டெல்லி பக்கம் என்றோ சென்றுவிட்ட நிலையில், ஏ.சி.சண்முகம் மட்டும் இன்னும் அதை எட்ட முடியாமல் உள்ளாராம்..
அத்துடன், பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி என ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதால், எப்போதுமே மத்திய அரசுடன் சுமூக உறவை பேண விரும்புவதாக தெரிகிறது. அதனால்தான், பாரிவேந்தரை போலவே, பாஜகவுடன் இம்முறை கூட்டணி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.. வேலூர் தொகுதியை வலியுறுத்தி வந்த நிலையில், பாஜகவும் அதே தொகுதியை தற்போது ஒதுக்கி அறிவித்திருக்கிறது.
எதிர்பார்ப்புகள்: "தாராளங்களை" பற்றியெல்லாம் ஏசி சண்முகம் எப்போதுமே கவலைப்பட மாட்டார்.. பசையுள்ள நபர் என்பதால், பல சலுகைகளை தொகுதிக்குள் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
அதுவும் இல்லாமல், ஏசி சண்முகம் பிரச்சாரம் என்றாலே தொகுதி மக்களுக்கு ஆர்வம் அதிகமாகிவிடும்.. இப்படித்தான் குடியாத்தத்தில் ஒருமுறை இவர் பிரச்சாரம் செய்தபோது, "என்னுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது, நோய்கள் பற்றின விழிப்புணர்வு இல்லை.. அதனால், என் அம்மா 38 வயதிலேயே இறந்துட்டாங்க.. தாயில்லாத பிள்ளையாக என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டாங்க..
தாயில்லா பிள்ளை: யாருடைய பிள்ளைகளும் தாயில்லாத பிள்ளைகளாக மாறிவிடக்கூடாது., அதுக்காகத்தான் என் அம்மா பெயரில் இயங்கி வரும் பெங்களூர் மருத்துவமனையில் பெண்களுக்கு இலவச மருத்துவ உதவியும், தேவைப்பட்டால் ஆபரேஷனும் இலவச செய்கிறேன்" என்று உருக்கமாக பேசியிருந்தார்.
அதுமட்டுமல்ல, இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக இருப்பேன் என்றும் அப்போதே ஏசி சண்முகம் தந்த வாக்குறுதியை தொகுதி மக்கள் மறக்கவில்லை.
இன்னொன்றையும் இங்கு நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.. ஏசி சண்முகம் என்றாலே, எம்ஜிஆரின் விசுவாசி என்றே தொகுதியில் அடையாளம் காணப்பட்டவர்.. இவரது கல்வி நிறுவனங்களில் நிறுவப்பட்டிருக்கும் எம்ஜிஆர் சிலைகளே அதற்கு சாட்சியாக விளங்கி கொண்டிருக்கின்றன..
இரட்டை இலை: அத்துடன், இரட்டை இலையுடன் தன்னுடைய தொகுதிகளுக்கு சென்று வாக்கு கேட்டவர்.. இந்த முறை பாஜக கூட்டணியில் தற்போது இணைந்துள்ளதால், தாமரை சின்னத்திலேயே ஏசி சண்முகம் போட்டியிட போவது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.
சிறுபான்மையினர் ஓட்டுக்களை அள்ளுவதற்காக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மும்முரமாகி வரும்நிலையில், ஏசி சண்முகம் இந்த முறை எப்படியும் சிறுபான்மையினரின் ஓட்டுக்களையே குறி வைத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
டார்கெட்: அதேபோல, ஏசி சண்முகம் இந்த முறை திமுகவையும் டார்கெட் செய்துள்ளார்.. காரணம், கடந்த முறை திமுகவிடம் இழந்ததை, இந்த முறை பெற்றுவிடுவது என்ற முனைப்பில் உள்ளாராம். ஆக, திமுக, அதிமுக என இரு மலைகளுக்கு இடையே, அனலாக வரப்போகிறார் AC சண்முகம்...!!












Click it and Unblock the Notifications