“பைத்தியங்கள்”.. வேலூர் இப்ராஹிம் இப்படி சொல்லிட்டாரே! பாஜகவில் திருடன், ரவுடி இணையலாம் என ஓபன் டாக்
சென்னை: பாஜகவில் திருடன், ரவுடி, ஊழல்வாதி இணைந்துகொள்ளலாம் என்று அக்கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்து இருக்கிறார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "திருடன் பாஜகவில் இணைந்து கொள்ளலாம். ஒரு ரவுடி பாஜகவில் இணைந்து கொள்ளலாம். ஊழல்வாதியாக இதற்கு முன் இருந்த செந்தில் பாலாஜி வந்து பாஜகவில் இணைந்து கொள்ளலாம். பிடிஆர் தியாகராஜன் கூட பாஜகவில் இணைந்துகொள்ளலாம்.
இணைவதை நாங்கள் தடுப்பதே கிடையாது. ஏனென்றால் பாஜக ஒரு அரசியல் கட்சி. இணைவதை தடுப்பதில்லை. இந்த கட்சிக்கு வந்த பிறகு அவர்கள் ஊழல் செய்கிறார்களா? அவர்கள் தவறு செய்கிறார்களா? என்று பார்த்து அவர்களை பக்குவப்படுத்தி, அந்த தவறில் இருந்து, அந்த ஊழலில் இருந்து அவர்களை தெளிவானவர்களாக மாற்றக்கூடிய வேலையை பாஜக செய்கிறது.

அதே வேளையில் இதற்கு முன் ஊழல் வழக்குகள் போன்ற பல்வேறு வழக்குகளை அவர்கள் சுமந்துகொண்டு இருந்தால் அதற்கு உதவி செய்யும் வேலையை பாஜக செய்வது இல்லை. ஊழல் வழக்குகளை பொறுத்தவரை விசாரணைக்கு பிறகு பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வந்து இருக்கிறது.
எங்கள் கட்சியில் இருந்து பின்னால் விலகியவர்கள் இருப்பார்கள். விலகியவர்கள் கூட வந்து சேர்வார்கள். பல விசயங்களில் இதுபோன்ற தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. பாஜகவை பொறுத்தவரைக்கும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறது. நீதிமன்றம் எங்கள் கட்சியினருக்கு எதிராகவே சில நேரங்களில் தீர்ப்பளித்தாலும்கூட அதை அவமதிக்காமல் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், நீதிமன்றமே தீர்ப்பளித்தாலும் அதை எதிர்ப்பது திமுக, திருமாவளவன், காங்கிரஸின் வேலை. நாங்கள் அவ்வாறு செய்வது இல்லை. ஊழலுக்கு எதிரான கட்சி என்பதால்தான் இன்று வரை பிரதமர் நரேந்திர மோடி மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. மத்திய அமைச்சர்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை.
ஒரு ஊழல் இல்லாத அரசை அமைத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் 9 ஆண்டுகால சாதனையில் முத்தாய்ப்பான சாதனை." என்றார். பாஜக மீதான அதிமுகவினரின் விமர்சனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் பைத்தியங்கள் உளறுவதை பற்றி கவலைப்படவில்லை.
நான் மிகவும் தெளிவாக சொல்கிறேன். எங்களை பொறுத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் கூட்டணியில் இருப்பதாக அறிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையிலேயே இதனை சொல்லி உள்ளார். அண்ணாமலை அவர்களை பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
பாஜகவை பொறுத்தவரை யார் பேசினாலும், மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதுதான் அதன் நிலைபாடாக இருக்கும். அதேபோல் அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பேசினால்தான் கட்சியினுடைய நிலைபாடாக இருக்கும். அதை விடுத்து ஒரு சில பைத்தியங்கள் எங்களுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்தால் பதில் சொல்ல வேண்டியதில்லை. பைத்தியங்களுக்கு நாங்கள் பதிலளித்தால் எங்கள் நேரத்துக்கு கேடு." என்றார்.












Click it and Unblock the Notifications