தமிழகத்தில் உள்நுழைவு அனுமதிச் சீட்டு நடைமுறை தேவை! வட மாநிலத்தவர்களுக்கு செக் வைக்கும் வேல்முருகன்
சென்னை: தமிழகத்திற்குள் வரும் வட மாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு அனுமதிச் சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் வடமாநிலத்தவர்களால் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வட மாநிலத்தவர்கள்
சென்னையைச் சுற்றியமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வடமாநில மாணவர்கள் துப்பாக்கிகளைக் கொண்டு நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்டது, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நகைக் கொள்ளை நிகழ்வுகளிலும், பல இடங்களில் ஏ.டி.எம். மற்றும் வங்கிக் கொள்ளை நிகழ்வுகளிலும் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டது, கூலிப்படையாக தமிழ்நாடு வந்து கொலைகளை நிகழ்த்திய வட இந்தியர்கள் விமானம் ஏறி தங்கள் மாநிலங்களுக்குச் சென்றது, கோவை உள்ளிட்ட பல இடங்களில் குடி போதையில் பெண்கள், குழந்தைகளிடம் தவறான முறையில் வட மாநிலத்தவர்கள் நடந்து கொண்டது என தொடர்ந்து இதுவரை பல் வேறு குற்றங்கள் வடமாநிலத்தவர்களால் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

போலீஸ் மீதே தாக்குதல்
அக்குற்றங்களின் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால், காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. குற்ற நிகழ்வுகள் நடக்கும் போது மட்டும், வெளிமாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ்நாடு காவல் துறையினர், இவர்களை முறையாகக் கண்காணிப்பதற்கான நிரந்தரப் பொறியமைவு எதனையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, மண்ணின் மக்களின் மீது தாக்குதல் நடத்தி வந்த வடமாநிலத்தவர்கள், தற்போது காவல்துறையினர் மீதே தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.

வெளியார் ஆக்கிரமிப்பு
தமிழினத்தின் அரசுரிமையை மறுக்கின்ற இந்திய ஒன்றிய அரசு, வெளியார் ஆக்கிரமிப்பை ஊக்குவித்து வளர்த்து, தமிழர் தாயகத்தை சிதைக்க முனைகின்றது. தமிழின அழித்தொழிப்பிற்கு அச்சாரமாக தமிழ்நாட்டு மண்ணில் ஆதிக்கம் செய்யும், பாஜக.வின் பின் புலத்துடன் வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் மூலமாக, குஜராத், உத்தரப்பிரதேசத்தை போன்று மதவெறி கலவரங்களை உருவாக்கி, அதை அரசியலாக்கி அதன் வாயிலாக, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடித்து மொத்த மண்ணின் மக்களை சிறுபான்மையாக்கலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது.

உள்நுழைவு அனுமதி
ஒன்றிய பாஜக அரசு கொடுத்த தைரியத்தின் காரணமாக தான், கோவை, திருப்பூரில் இந்தியில் பிரச்சாரம், திருப்பூரில் கலவரம் ஆகிய குற்ற நிகழ்வுகள் அரங்கேறியது. அதன் மற்றொரு சிக்கல் தான், காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதலும். எனவே, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இதற்காக, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

வெளியேற்ற வேண்டும்
சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களில் குவித்து காணப்படுகின்ற வடமாநிலத்தவர்களை கண்காணிக்க, காவல்துறையில் தனி பிரிவை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். கடந்த 2000ஆம் ஆண்டு குற்றப் பின்னணி கொண்ட 1,16,782 வெளி நாட்டவரை அமெரிக்கா, அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியது. பின்னர் 2011ஆம் ஆண்டு, பல மடங்கு அதிகரித்து சற்றொப்ப 3 இலட்சத்து 96,906 வெளி நாட் டவர்களை அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியது அமெரிக்கா. அதுபோன்று, குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்ற வடமாநிலத்தவர்களை, தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

வக்காலத்து வேண்டாம்
தமிழ்நாட்டில் வேலைக்கு ஒட்டிய வயிரோடு வருகிறான், குறைந்த கூலிக்கு வருகிறான் என்று சிலர் வக்காலத்து வாக்குவதை பொருட்படுத்தாமல், தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிட சான்று ஆகியவை வழங்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.












Click it and Unblock the Notifications