வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா?
சென்னை: தமிழகத்தில் சாதி ஒழிந்து விட்டது என திராவிட கட்சிகள் தம்பட்டம் அடித்து வந்தாலும் தேர்தலில் சாதி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தொகுதி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு என அனைத்திலும் சாதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழகத்தின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்கு என மூன்று பகுதிகளிலும் குறிப்பிட்ட சமுதாய வாக்குகள் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகள் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வன்னியர் சமூக மக்கள் தொகை அதிகம். இந்த மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தினர் தோராயமாக 15 முதல் 20 சதவீதம் வரை இருக்கலாம். வட தமிழ்நாட்டின் இந்த மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வன்னியர் சமுதாயத்தின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.
இதனால் வடமாவட்டங்களில் உள்ள வன்னிய சமூக வாக்குகளை பெறுவதற்காக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் தேர்தல் சமயத்தில் வன்னியர் சமூகத்தின் ஆதரவு உள்ள கட்சிகளை தங்களோடு இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை பாமக அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டிருந்தது.
ஆனால், இப்போது பாமக இரண்டாக உடைந்து விட்ட பிறகு வன்னியர் சமூக மக்களின் ஆதரவு அல்லது வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பதில் மிகப்பெரிய இழுபறி ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பாமகவாக இருந்தவரை ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வன்னியர் சமூக மக்களின் வாக்குகளை தாங்கள் சார்ந்து இருக்கும் கூட்டணிக்கு எளிதாக கொண்டு சேர்த்தநீர்.
இப்போது தந்தைக்கு மகனுக்கும் ஏற்பட்டுள்ள பிணக்கால் வன்னியர் சமூக மக்களின் வாக்கு யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதும் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் வன்னிய சமூக மக்களிடையே மிக குறிப்பிட்ட தலைவராக பார்க்கப்படக்கூடிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தனது ஆதரவு எந்தப் பக்கம் என்பதை முடிவு செய்யாமல் இருக்கிறார்.
2019 நாடாளுமன்ற தேர்தல் முதற்கொண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து வந்த வேல்முருகன், தற்போது தாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க திமுக மறுக்கிறது எனக்கூறி அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
வெளிப்படையாக பார்க்கும் போது திமுக தங்களுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதாலும், தாங்கள் முன்னிறுத்திய 10 அம்ச கோரிக்கைகளுக்கு திமுக செவி கொடுக்காததால் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டதாக இருந்தாலும், வன்னியர் சமூகத்தினர் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் இடைவெளியை தனக்கு சாதகமாக்கி கொள்ளும் நோக்கிலேயே வேல்முருகன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதாவது ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவு வன்னியர் சமூக மக்களிடையேவும் பிளவாய் தொக்கி நிற்கிறது. இதுவரை ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் சொல்லும் அல்லது கைகாட்டும் கட்சிகளுக்கு பெரும்பாலான வன்னியர் சமூக மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.
ஆனால், இப்போது யார் பக்கம் நிற்பது என்பதே வன்னியர் சமூக மக்களுக்கு மிகப்பெரிய குழப்பமாக உருவெடுத்துள்ள நிலையில், வன்னியர் சமூக மக்களின் ஒட்டுமொத்த வாக்கையும் அல்லது நம்பிக்கையும் பெறுவதற்கான ஒரே தலைமையாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கான காய் நகர்த்தலில் வேல்முருகன் ஈடுபட்டுள்ளார் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாக இருக்கிறது.
இதன் மூலம் இந்தத் தேர்தல் இல்லாவிட்டாலும் இனி வரப்போகும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை பழைய ஒருங்கிணைந்த பாமகவிற்கு இணையாக கட்டமைக்க முடியும் என வேல்முருகன் நம்புகிறார்.
அதற்கான விதையை இப்போதே விதைத்தால்தான் இனி வரும் காலங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என நீண்ட கால கணக்கு போட்டு வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகவே அரசியல் களம் அறிந்தவர்கள் கருதுகிறார்கள். ராமதாஸ் அன்புமணியிடையே ஏற்பட்டுள்ள பிளவை, தனக்கு சாதகமாக்கிக் கொள்ள வேல்முருகன் மிகச் சரியாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நிலவரம் அறிந்தவர்கள்.
அரசியல் கணக்கு யார் வேண்டுமானாலும் போடலாம் ஆனால் அதற்கான விடை மக்கள் கையில் இருக்கிறது என்பதை வேல்முருகன் அறிவாரா என்பதை வரும் தேர்தல் களம் அவருக்கு உணர்த்தி விடும். பொறுத்திருந்து பார்க்கலாம்.
- சிறப்பு நிருபர்












Click it and Unblock the Notifications