பாஜக காலூன்ற முடியாது! தமிழகத்தை பற்றி மோடி அரசுக்கு புரிந்துவிட்டது! வேல்முருகன் சாடல்!
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக எப்போதுமே காலூன்ற முடியாது என்பதை புரிந்து கொண்ட மோடி அரசு, கர்நாடகாவிலாவது பாஜக ஆட்சியை உறுதிப்படுத்தி கொள்ளலாம் என, மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு, கர்நாடக அரசுக்கு துணை போவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்பதை தான் காட்டுவதாக கூறியிருக்கிறார்.
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கர்நாடக அரசு
கர்நாடக அரசு 2022-2023 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மேகதாதுவில் அணைகட்ட ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நிதி நிலை அறிக்கையை முன்வைத்து சட்டப் பேரவையில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் இந்திய அரசு ஒப்புதல் பெற்று அணைகட்டியே தீருவோம் என்று கூறியுள்ளார். கர்நாடக மாநில நீர்ப்பாசனதுறை அமைச்சர் கோவிந்தகார்ஜோள், காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் அணை கட்டும் திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. தமிழ்நாடு அரசு தடுத்தாலும் அணை கட்டப்படும் என்று ஆணவத்துடன் பேசியுள்ளார்.

மேகதாது அணை
மேகதாது அணை விவகாரத்தில் யாருடைய மத்தியஸ்தமும் தேவையில்லை. ஒன்றிய அரசு உடனடியாக அத்திட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், பாஜக ஆட்சியாக இருந்தாலும், அவர்கள் காவிரி விவகாரத்தில் தமிழருக்கு எதிராக போக்கை கையாண்டு வருவது தான் வரலாறு. அதனை, நமக்கு கடந்த கால கற்பிதங்கள் நிறைய உணர்த்தியுள்ளது.
குறிப்பாக, 1970-களில் அன்றைய ஒன்றிய காங்கிரசு ஆட்சியின் மறைமுகத் துணையோடு கர்நாடகம் சட்டவிரோதமாக ஹேமாவதி, ஹேரங்கி, கபினி அணைகளைக் கட்டியது. அதனால், தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை பெற முடியவில்லை. இதன் காரணமாக, தமிழ்நாடு பேரிழப்புகளை சந்தித்தது. அதுமட்டுமின்றி, 1990-களில், கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். பல்வேறு இழப்புகளை சந்தித்த தமிழர்கள் அகதிகள் போன்று தமிழ்நாட்டில் குடியேறினர். எப்போதுமே, தமிழர் விரோத போக்கை கையாள்வதே கர்நாடக அரசின் நிலைப்பாடு.

தமிழருக்கு எதிரான
ஆனால், மேகதாது விவகாரத்தில் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டிய ஒன்றிய அரசும், தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது, மார்ச் 5 அன்று, பெங்களூருவில் பேசிய ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர், மேகதாது அணை திட்டம் இந்தாண்டு தொடங்கும் என அறிவித்துள்ளார். சட்டவிரோத மேகதாது அணை கட்டுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் துணை நிற்கும் ஒன்றிய அரசு, கர்நாடக அரசை விட அத்திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

காவிரி நடுவர் மன்றம்
காவிரி நடுவர்மன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரியின் குறுக்கே எந்தவொரு அணையும் கட்டப்படக்கூடாது. அவ்வாறு கட்டுவதாக இருந்தால் தமிழ்நாட்டின் ஒப்புதலை கர்நாடக அரசு பெறவேண்டும் எனத் தெளிவாகக் கூறியுள்ளன. காவிரி நடுவர்மன்றம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் அல்லது மதிக்காமல், மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு, கர்நாடக அரசுக்கு துணை போவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்பதை தான் காட்டுகிறது.

வேல்முருகன் சாடல்
தமிழ்நாட்டில் பாஜக எப்போதுமே காலூன்ற முடியாது என்பதை நன்கு புரிந்து கொண்ட மோடி அரசு, எதிர் வரும் காலங்களில் கர்நாடகாவிலாவது பாஜக ஆட்சியை உறுத்திப்படுத்தி கொள்ளலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டுகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது.












Click it and Unblock the Notifications