Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேங்கைவயல் விவகாரம்- சிபிஐ விசாரணை கேட்பது ஏமாற்று வேலை- திருமாவளவனுக்கு கி.வீரமணி எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக்கிக் குளிர் காய்வது என்பது சரியானதல்ல. குறிப்பாகக் கூட்டணி கட்சிகளுக்குப் பொறுப்பு அதிகமாகவே உண்டு. தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத் தூசு கிடைத்தாலும் தூணாகப் பெரிதுப்படுத்தும் பிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூக்குரலைப் புரிந்து கொள்ள முடியும். தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி ஜாதி முலாம் பூசுவது மிகப் பெரிய ஆபத்தாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல் நிலைக் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு 2022 டிசம்பரில் கலக்கப்பட்டதான கடைந்தெடுத்த இழிசெயல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்தப் பிரச்சினையை மய்யமாக வைத்து வதந்திகளைப் பரப்பிட வேண்டாம் என்றும், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும் தமிழ்நாடு அரசு வேண்டுகோளை விடுத்துள்ளது.

vengaivayal veeramani thirumavalavan

397 பேர்களிடம் விசாரணை

இந்த நுட்பமான 'எளிதில் தீப்பற்றும்' பிரச்சினைமீது யாராக இருந்தாலும் தீரமாக சிந்தித்துப் பொறுப்புடன் கருத்துகளை வெளியிடுவது அவசியமாகும். அரசு வெளியிட்ட அறிக்கையில், எவ்வளவு அக்கறையுடன் அனைத்து வகைத் தொழில் நுட்பங்களையும், தடய அறிவியல்களையும் பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகவே தெரிய வருகிறது.
397 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 87 செல்போன் டவர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

ஒரு லட்சம் செல்போன் ஆய்வு

ஒரு லட்சம் செல்போன் பயன்பாட்டை ஆய்வு செய்து துப்புத் துலக்கப்பட்டுள்ளது.
ஒரு காவல்துறை எதை எதை எல்லாம் அதிகபட்சம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் துல்லியமாக செய்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. 'திராவிட மாடல்' அரசின் கொள்கை எத்தகையது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்து செயல்படும் அரசு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே!

கூட்டணி கட்சிகளுக்கு பொறுப்பு அதிகம்

இதனை அரசியல் பிரச்சினையாக்கிக் குளிர் காய்வது என்பது சரியானதல்ல. குறிப்பாகக் கூட்டணி கட்சிகளுக்குப் பொறுப்பு அதிகமாகவே உண்டு. தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத் தூசு கிடைத்தாலும் தூணாகப் பெரிதுப்படுத்தும் பிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூக்குரலைப் புரிந்து கொள்ள முடியும். தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி ஜாதி முலாம் பூசுவது மிகப் பெரிய ஆபத்தாகும். விமர்சனம் செய்யலாம்; அப்படி விமர்சிக்கும் போது காவல் துறையின் செயல்பாட்டில் என்ன குறைபாடு என்பதைச் சுட்டிக் காட்டலாம். அதைப் புறந்தள்ளி பிரச்சிைனயை வேறு கண்ணோட்டத்தில் விமர்சிப்பது, அரசியல் லாபத்துக்காக பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாட்டும் குற்றச்சாட்டு நெருப்புக்குத் தெரிந்தோ தெரியாமலோ நெய் ஊற்றுவதாக அமைந்து விடாதா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பாஜகவின் நிலைப்பாடு என்ன?

தாழ்த்தப்பட்டோர் பிரச்சினை, தீண்டாமை - இவற்றில் பிஜேபி, சங்பரிவார்களின் பார்வை என்ன என்பது தெரியாத ஒன்றா?
தாழ்த்தப்பட்ட தோழர் மீசை வைத்துள்ளார் என்பதற்காகவும், குதிரை மேல் வந்தார் என்பதற்காகவும், கோயில் திருவிழாவை வேடிக்கை பார்த்தார் என்பதற்காகவும் தாக்கப்படவில்லையா? ஏன் கொல்லப்பட்டதும்கூட உண்டு.

குடியரசுத் தலைவரை அவமதித்தவர்கள்மீது நடவடிக்கை உண்டா?

இந்தியாவின் முதல் குடிமகனும், முப்படைகளின் தலைவரும், அரசமைப்புச் சட்டத்தின் பிதாமகனுமான மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள்ளும், ராஜஸ்தான் அஜ்மீர் - பிரம்மா கோயிலுக்குள்ளும் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதைவிட பெருங் குற்றம் வேறொன்று இருக்க முடியுமா? குடியரசுத் தலைவரையும், அவர் குடும்பத்தையும் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்களின்மீது பிஜேபி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கும், திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் குறைந்தபட்சம் அழைப்பைக்கூட இன்றைய குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தவர் என்ற காரணத்துக்காக அளிக்காதவர்கள் வேங்கைவயலைப் பற்றிப் பேச அருகதை உடையவர்களா?
வருணாசிரமத்தைத் தூக்கிப் பிடிக்கும் கொள்கையைக் கொண்ட கட்சியினர் ஆட்சிதானே இந்தியாவில் நடக்கிறது.

ஜாதி ஒழிப்பு அரசு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெரியார் நினைவு சமத்துவபுரமும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டமும் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்றால், இந்த அரசின்தூய்மையான ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு - சமூகநீதி சமத்துவக் கொள்கை எத்தகையது என்பது வெள்ளிடை மலையாகும்.

பகுத்தறிவுக்கு அழகல்ல

எங்காவது ஒரு பேருந்து நடத்துநர் எந்தக் காரணத்துக்காகத் தாக்கப்பட்டாலும் பேருந்து நடத்துநர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து போராடுவது, வழக்குரைஞர் ஒருவர் எங்காவது தாக்கப்பட்டால் (என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல்) வழக்குரைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தைப் புறக்கணிப்பது.. இத்தியாதி இத்தியாதி முறைகள் ஏற்கத்தக்கதுதானா? இது எங்கு கொண்டு போய் விடும் என்பதைப் பொறுப்புமிக்க தலைவர்கள் உணர்ந்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

vengaivayal veeramani thirumavalavan

எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணையா?

எதற்கெடுத்தாலும் சி.பி.அய். (சிபிஐ) விசாரணை தேவை என்பது வாடிக்கையான வழமையான குரலாக இருப்பது வேடிக்கையானது - வினோதமானது! மாநிலக் காவல்துறை மீது நம்பிக்கையற்ற தன்மை சரியானதல்ல. எடுத்துக்காட்டுக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். சாத்தான் குளத்தில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.அய். வசம்தான் ஒப்படைக்கப்பட்டது. 2020 ஜூனில் நடந்த நிகழ்வு இது. 5 ஆண்டுகள் ஓடி விட்டன. 13.12.2021 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது - மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்று கேட்டதுண்டே! அதற்குப் பிறகும் நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. விசாரணை முடிவுக்கு வரவில்லை. தீர்ப்பும் கிடைக்கப் பெறவில்லை.

ஏமாற்றிக் கொள்ளும் வேலை

சி.பி.அய்.யிடம் ஒப்படைத்தால் விசாரணை விரைவாக நடைபெறும் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான்.வேங்கைவயல் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு அரசு நேரியமுறையில் அரிய தொழில் நுட்ப முறைகளை எல்லாம் பயன்படுத்தி விசாரணையை மிகவும் சிறப்பாகவே நேர்மையாகவே நடத்தி வருகிறது. இதனைப் பயன்படுத்தி அரசியல் செய்வது நியாயமல்ல - பொறுப்பான செயலும் அல்ல.

vengaivayal veeramani thirumavalavan

அமளிக்காடாக்க வேண்டாம்

இந்தியாவிலேயே ஜாதிக் கலவரம், மதக் கலவரம் இல்லாமல் அமைதிப் பூங்காவாக மணம் வீசும் மாநிலத்தை அமளிக்காடாக்க முயலும் சக்திகளை அடையாளம் காட்டும் பொறுப்பு, நாட்டு நலனில் அக்கறை கொண்ட நம் அனைவரின் கடமை என்பதை மிகுந்த சமூகப் பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டுகிறோம். இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.

vengaivayal veeramani thirumavalavan

வேங்கை வயல் விவகாரம்- திருமாவளவன் கூறியது என்ன?

வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது; மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.
எனவே, சி பி சி ஐ டி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சி பி சி ஐ டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+