சென்னையின் இதயப்பகுதியில் அமையப்போகும் நான்கு வழி மேம்பாலம்.. இதுதான் ரியல் குட்நியூஸ்
சென்னை: வரும் ஆண்டில் 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
2023-2024 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது அவர் சென்னைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார். சென்னையில் உள்ள சாலைகளை மேம்படுத்தவும், ஆறுகளை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை வெளியிட்டார்.
அதில் மிக முக்கியமான ஒன்று தான், சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு.. குறிப்பாக சென்னையில் மிகவும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை மேம்பாலம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட காரணம் இருக்கிறது.

மேம்பாலம்
சரி அறிவிப்பு என்ன? அது எப்படி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்பதை பார்ப்போம். " வரும் ஆண்டில் 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்பபடும். பன்னாட்டுப் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளுக்கு மேல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு பொறியியல் சாதனையாக அமையும். இப்பணிகள் நிறைவுற்றவுடன், பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலை பாதுகாப்பும் மேம்படும்" இவ்வாறு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேம்பாலம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.

இதயப்பகுதி
நிதியமைச்சரின் அறிவிப்பின் படியே, மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்கள் அமைந்துள்ள சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான பாதையில் மேம்பாலம் அமைப்பது பெரும் சவாலான காரியம் ஆகும். ஏனெனில் சென்னையின் இதயப்பகுதியே தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள பகுதிகள் தான். ஏனெனில் மைலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, மெரினா கடற்ரை ஒரு பகுதியிலும், மறுபகுதியில் முழுவதுவமாக தியாகராய நகர், மேற்கு மாம்பலம் இருக்கிறது.

நெரிசல் குறையும்
நந்தனம், தேனாம்பேட்டை, சிஐடி காலனி ஆகிய சிக்னல் தான் மிகவும் முக்கியமான பெரிய சிக்னல்கள் ஆகும். எப்போதுமே இந்த சிக்னல்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். சென்னையின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதி மக்கள் செல்லும் போது, இந்த இடங்களில் தான் சிக்னலில் சிக்கி தவிப்பார்கள். எனவே தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் குறையும்.

சென்னைக்கு குட்நியூஸ்
எனவே இந்த அறிவிப்பு சென்னைக்கு மிகவும் சூப்பரான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. சென்னை மக்களுக்கு நிச்சயம் நல்ல அறிவிப்பாக இருக்கும். சைதாப்பேட்டை அடையாறு பாலத்தில் தொடங்கி ஜெமினி மேம்பாலம் முன்பு வரை இந்த மேம்பாலம் இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications