காற்றில் கரைந்த கலகல சிரிப்பு.. விடை கொடுத்த மதன் பாப்! இன்று இறுதிச் சடங்கு.. கண்ணீரில் ரசிகர்கள்!
சென்னை: நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், குத்துச்சண்டை வீரர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் மதன் பாப் தனது 71 வயதில் சென்னையில் நேற்று காலமானார். இதை அடுத்து அவரது உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து அவரது உடல் இன்று மாலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்தியா முழுவதும் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மதன் பாப். தனது தனித்துவமிக்க சிரிப்பு மற்றும் முக பாவனைக்காக தங்களது படங்களில் ஒரு காட்சியிலாவது மதன் பாப் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட இயக்குநர்கள் ஏராளம்.
வானமே எல்லை படத்தில் தான் முதன்முதலாக மதன் பாப் அறிமுகமானர். மதன் பாபு என்ற பெயரை தான் மதன் பாப் என்று மாற்றி படத்தில் அறிமுகம் செய்தார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். உண்மையில் மதன் பாபுவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பதாகும்.

இசை உலகில் காலடி எடுத்து வைத்து இசையமைப்பாளராகவே கலை உலகில் தனது வாழ்க்கையை தொடங்கி இருந்தார். ஆனால் காலம் அவரை நடிகனாக ஏற்றுக் கொண்டது. அது மட்டும் அல்லாமல் மிமிக்கிரி , நிகழ்ச்சி தொகுப்பு, குத்துச்சண்டை என பன்முக திறமை கொண்டவராக இருந்தார். தமிழில் மட்டுமே 150 க்கும் மேற்பட்ட படங்களை நடித்திருக்கிறார்.
வானமே எல்லை, தேவர் மகன், ஜாதிமல்லி, உழைப்பாளி, ஃபிரண்ட்ஸ், பூவே உனக்காக, சதிலீலாவதி, மாப்பிள்ளை, பம்மல் கே சம்பந்தம், கிரி, நீங்கள் கேட்டவை என அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன. ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவர் உடனும் நடித்திருப்பவர். குறிப்பாக நீங்கள் கேட்டவை படத்தில் ஹிட் அடித்த பாடல்களில் மதன் பாப் பங்கு மிக அதிகம். அந்த படம் முழுக்க இசை கலைஞரான வந்திருப்பார்.
தொடர்ந்து சின்னத் திரைக்கு வந்த அவர், பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக அசத்தினர். அதை வைத்தே தற்போது வரை பல நிகழ்ச்சிகள் நடப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த நிலையில் புற்று நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படும் மதன் பாப் நேற்று சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் மதன் டாப் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது. நடிகர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதும் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 4 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அவரது உடலுக்கு பல முக்கிய பிரமுகர்கள் நடிகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications