முதுபெரும் இடதுசாரி தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி- 'தோழர்களுக்கு' சிபிஎம் வேண்டுகோள்
சென்னை: முதுபெரும் இடதுசாரித் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா (வயது 102) முதுமை மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா, இந்தியாவில் வாழும் மூத்த இடதுசாரித் தலைவர். தமிழ்நாடு அரசின் தகைசால் விருது பெற்றவர். என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கான சான்றிதழில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மதுரையில் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தார்.

இந்நிலையில் என்.சங்கரய்யா உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு சீரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் தோழர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கட்சியின் மாநிலக்குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று தோழர் என்.சங்கரய்யா அவர்களை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினர். தோழர் சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்து வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு சிபிஎம் கட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications