வரலாற்றில் எந்த மாநிலமும் பெற்றிடாத வெற்றி இது.. 4 வழக்கறிஞர்களையும் பாராட்டித் தீர்த்த ஸ்டாலின்!
சென்னை: "ஆளுநருக்கு எதிரான வழக்கின் வெற்றி என்பது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து மாநில மக்களுக்கும், மக்களாட்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி" என வழக்கறிஞர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2 முறை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் உச்ச நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சாசனம் 200-ஆவது பிரிவின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் அனுப்பி வைக்கப்படும் போது ஆளுநருக்கு முன் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தலாம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பு அளித்தனர். குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம் என உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142ன் படி உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
வழக்கறிஞர்களுக்கு ஸ்பெஷல் விருந்து
உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றது. தமிழக அரசு சார்பில் இந்த வழக்கில் 4 மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். முகுல் ரோஹத்கி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, பி.வில்சன் ஆகியோர் சிறப்பாக வாதிட்டனர். அவர்கள் எடுத்து வைத்த சிறப்பான வாதங்கள், சட்ட நுணுக்கங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கில் தமிழக அரசு வெற்றி பெற்றது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று பாராட்டு விழா நடைபெறுகிறது. சிறப்பாக வாதாடி தீர்ப்பை பெற்றுத் தந்த சீனியர் வழக்கறிஞர்களை நேரில் அழைத்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கௌரவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "இந்த விழாவை பாராட்டு விழா என்று சொல்வதைவிட, வெற்றி விழா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்! இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் எந்த மாநிலமும் எப்போதும் பெற்றிடாத இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட வழக்கறிஞர்களைப் பாராட்டி எல்லையில்லாத மகிழ்ச்சியோடு நாமெல்லாம் கூடியிருக்கிறோம்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை - ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு, போட்டி அரசுகளை நடத்த தொல்லைகள் கொடுக்கின்ற காலத்தில், மிக முக்கியமான இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
மிகப்பெரிய வெற்றி
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாண்பமை பர்த்திவாலா, மாண்பமை மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு - தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும் - மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி! ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி!
"அரசியல் சாசன பிரிவு 142-இன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது" - "இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது" என்று மாண்பமை நீதியரசர்கள் தீர்ப்பளித்தபோது, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு வணக்கம் செலுத்தியது.
பெருமையோடு சொல்கிறேன்
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாத்திடும் வரலாற்று சாசனமாக இந்த தீர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். இது இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தால் பெற்றுத்தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை!
இந்த அரசியல் உரிமையை - சட்டபூர்வமான வாதங்களின் மூலமாக தமிழ்நாடு அரசு முன்வைத்து வாதாடியது. அந்த அறிவார்ந்த வாதங்களுக்குச் சொந்தக்காரர்களான வழக்கறிஞர்கள்தான் இன்றைக்கு நம்மோடு இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
முகுல் ரோஹத்கி வரவில்லை
* உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் - முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி இந்த விழாவிற்கு வர இயலவில்லை. அவர் இங்கு இல்லையென்றாலும் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
* உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் - முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் - அபிஷேக் சிங்வி, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் - ராகேஷ் திவேதி, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் - மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் ஆகியோரை தமிழ்நாடு அரசின் சார்பில் நான் பாராட்டுகிறேன்.
அறிவிற்சிறந்த வழக்கறிஞர் பெருமக்களே.... உங்களின் வாழ்க்கையில் எத்தனையோ பெரிய பெரிய வழக்குகளைப் பார்த்திருப்பீர்கள். வெற்றியும் பெற்றிருப்பீர்கள். தனிநபர்கள் - அமைப்புகள் - ஏன், தனியொரு மாநிலம் கூட அந்த வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், இந்த வழக்கின் வெற்றி என்பது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் - அனைத்து மாநில மக்களுக்கும் - மக்களாட்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி!
வரலாற்றில் நிலைத்திருப்போம்
இந்த மண்ணில் மக்களாட்சி இருக்கும் வரைக்கும், இந்த வழக்கும் வலுவான வாதங்களை வைத்த நீங்களும் பேசப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்! வழக்குத் தாக்கல் செய்த தமிழ்நாடும் - வாதிட்ட நீங்களும் - தீர்ப்பளித்த நீதியரசர்களும் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருப்போம் என்பது உறுதி! இந்த தீர்ப்பு கொடுத்திருக்கும் புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையோடுதான் மாநில சுயாட்சிக் குழுவை நாம் உருவாக்கியிருக்கிறோம்!
இந்திய ஜனநாயகத்தில் மக்களாட்சிக்கு வலுசேர்க்க, பேரறிஞர் அண்ணா வலியுறுத்தி, தலைவர் கலைஞர் முழக்கமாக வடித்து கொடுத்ததுதான் "மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி" என்ற இலக்கு! அந்த இலக்கை வென்றெடுக்க இந்தத் தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது! மாநில சுயாட்சியைப் பெறுவோம்! கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்!" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications