என்னாது முதல்வர் நாற்காலியில் விஜய்! இன்ஸ்டாவில் விற்பனையாகும் காலண்டர்! "குறை குடங்கள்" அலப்பறை
சென்னை: முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்திருப்பது போல் காலண்டரை தவெகவினர் அடித்து இன்ஸ்டாகிராமில் வியாபாரம் செய்து வருகிறார்களாம். யார் யாருக்கு எந்தெந்த துறை என்ற அமைச்சரவை பட்டியல் அண்மையில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்த காலண்டர் வெளியீடு, என்ன இப்படி கிளம்பிட்டாங்க என பேச வைக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற போகிறது. வழக்கமான தேர்தலை விட இந்த தேர்தலின் முடிவுகளை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள், காரணம், விஜய்!

233 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் தவெக தனித்து போட்டியிடுகிறது. அது போல் எடப்பாடி தொகுதியில் சுயேச்சையின் டிவி பெட்டி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார்.
12 சதவீத வாக்குகள்
இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் விஜய்க்கு 12 சதவீத வாக்குகள் கிடைக்கும். விஜய் கட்சியால் 8 முதல் 9 சீட்டுகள் வரை வெல்ல முடியும் என கணிக்கப்படுகிறது. இன்னும் சில கணிப்புகள் 5 -க்குள்ளான எண்ணிக்கையில்தான் தவெக வெல்லும் என்கிறார்கள்.
கள யதார்த்தம்
இந்த கள யதார்த்தம் புரியாத தவெகவினர் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை. பிரச்சாரத்தின் போது சி.ஜோசப் விஜய் முதலமைச்சர் என்ற பெயர் பலகையை பரிசாக கொடுத்தனர். அது போல் தேர்தல் நடந்து முடிந்ததும் ஒரு அமைச்சரவை பட்டியலை தவெகவினர் சமூதவலைதளங்களில் பரப்பினர்.
அதில் கட்சியின் தலைவர் விஜய்க்கு உள்துறை, மகளிர் மற்றும் பெண்கள் நலத் துறை. செங்கோட்டையனுக்கு பொதுப் பணித் துறை, ஆதவ் அர்ஜுனாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை, ஆனந்துக்கு போக்குவரத்து துறை, அருண்ராஜுக்கு உணவுத் துறை, மரிய வில்சனுக்கு உயர் கல்வித் துறை, காரைக்குடி பிரபுவுக்கு பால்வளத் துறை என குறிப்பிடப்பட்டிருந்தது.
நிர்மல் குமார் மறுப்பு
ஆனால் இந்த பட்டியலை நிர்மல் குமார் மறுத்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்து இருக்கின்றனர் எனவும் அந்த பயத்தின் காரணமாகவே திமுக இதுபோன்று பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள்" என விமர்சித்திருந்தார்.
இந்த பட்டியலை பார்த்த பலரும், "இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல" என்றனர். இந்த நிலையில் இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் முதல்வர் விஜய் என குறிப்பிடும் காலண்டரையும் ரெடி செய்துவிட்டார்கள்.
காலண்டர் வைரல்
அந்த காலண்டர் அட்டை படத்தில் விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலும் சி.ஜோசப் விஜய் முதலமைச்சர் என நேம் போர்டு இருப்பது போன்று பக்கத்தில் மூவர்ணக் கொடி இருப்பது போலும் அவர் எதோ ஒரு கோப்பில் கையெழுத்திடுவது போலவும் படம் உள்ளது.
எம்ஜிஆர் பாடல்
காலண்டரின் ஸ்டார்டிங் தேதியே மே 4ஆம் தேதிதான். அதிலும் விஜய் படம் உள்ளது. அன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை என்பதால் அந்த தேதியை தேர்வு செய்துள்ளனர். அது போல் இதன் பின்னணியில் நான் ஆணையிட்டால் எம்ஜிஆர் பாடல் வருகிறது.
இந்த காலண்டர்கள் இன்ஸ்டாகிராமில் விற்பனைக்கு வந்துள்ளது. அதை பலரும் வாங்கி வருகிறார்கள். காலண்டரையும் அடிச்சுட்டாங்களே என சமூகவலைதளங்களில் கிண்டல்கள் எழுந்துள்ளன. நிறை குடம் தழும்பாது, குறை குடம் தழும்பும் என விமர்சித்து வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications