நானும் மனுசன் தானே..எப்படி விட்டுட்டு போக முடியும்! ’இதனால்’ தான் சென்னைக்கு போனேன்.. விஜய் வீடியோ
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் மூன்று நாட்களுக்குப் பிறகு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய். அதில் சம்பவம் நடந்த அன்றே கரூருக்கு மீண்டும் செல்ல நினைத்ததாகவும், ஆனால் தேவையில்லாமல் பிரச்சனை வரும் என்று தான் செல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெரும் ரசிகர் கூட்டத்தின் உற்சாகம் சில மணி நேரங்களுக்குள் உயிரிழப்பாக மாறி, 6 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உட்பட 41 பேரின் உயிரை பறித்தது.
தற்போது 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. முன்னரே எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தபோதிலும், திடீர் தள்ளுமுள்ளு மற்றும் திட்டமிடல் குறைபாடுகள் காரணமாகவே இந்த துயரம் நிகழ்ந்தது என்பது அவர்களின் வாதம்.

கரூர் நெரிசல்
சனிக்கிழமை காலை 9 மணிக்கே தொடங்க வேண்டிய நாமக்கல் பிரசாரத்திற்காக மக்கள் அதிகாலையிலேயே கூடினர். ஆனால், நடிகர் விஜய் தனது பேச்சை பிற்பகல் 2.30 மணிக்கு மட்டுமே தொடங்கினார். 8 மணி நேரம் வெயிலில் காத்திருந்த மக்கள் மயக்கம் அடைந்தனர். அங்கு ஏற்பட்ட சிக்கல்களே கரூரில் நிகழ்ந்த பெரும் துயரத்திற்கான முன்னோட்டமாக இருந்தன. கரூரில் விஜய் மதியம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இரவு 7.40 மணிக்குத்தான் தோன்றினார். இதனால் பலருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
41 பேர் உயிரிழப்பு
தொடர்ந்து விஜய் பிரச்சாரத்தை முடித்ததும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் மயங்கமடைந்து கீழே விழுந்தவர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். பலர் மூச்சு விட முடியாமல் மரணம் அடைந்ததாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே கரூரிலிருந்து புறப்பட்டு சென்றார் விஜய். கரூரில் இருந்து சுமார் 10 மணியளவில் திருச்சிக்குச் சென்ற அவர் தனது சொகுசு விமானத்தில் சென்னை சென்றார்.
தாமதமான விஜய்
10 மணிக்கு திருச்சியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் விஜய் அதற்கு பதில் அளிக்கவில்லை. சென்னையில் தரையிறங்கிய பிறகே எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார். அடுத்த நாள் அதே ட்விட்டரில் 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காவிட்டாலும் ஒரு வீடியோ மூலமாவது ஆறுதல் தெரிவித்து இருக்கலாம் என விஜய் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
விஜய் வீடியோ
இந்நிலையில், சம்பவம் நடந்த அன்றே கரூருக்கு மீண்டும் செல்ல நினைத்ததாகவும், ஆனால் தேவையில்லாமல் பிரச்சனை வரும் என்று தான் செல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருக்கும் விஜய், "மக்களுக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் பார்த்து பார்த்து இடங்களை தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் நடக்கக்கூடாதது நடந்து விட்டது.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
விஜய் பேச்சு
நானும் மனிதன் தானே.. அவ்வளவு பெரிய துயரம் இருந்திருக்கும்போது எப்படி என்னால் சென்னை திரும்ப முடியும். இருந்தபோதும் நான் மீண்டும் சென்றால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் செல்லவில்லை. இதை வைத்து வேறு எதுவும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சென்னை திரும்பினேன்" என விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications