"33 குடும்பத்தினரிடம் பேசியாச்சு! யாருக்குமே விஜய் மீது கோபம் இல்லை"- கரூரில் முகாமிட்ட அருண்ராஜ்
சென்னை: தவெக தலைவர் விஜய், கட்சியினர் மீது கரூர் மக்களுக்கு எந்த கோபமும் இல்லை என அவர்களே கூறியதாக கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தில் பலியானவர்களில் 33 குடும்பத்தினரிடம் வீடியோ காலில் விஜய் பேசி ஆறுதல் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு அந்த ஊர் மக்களிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த இரு நாட்களாக சுமார் 33 குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசினார்.

அவர்களுக்கு ஆறுதல் கூறினார். "என்னதான் நான் ஆறுதல் கூறினாலும் உங்களுக்கு அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது, என்ன நடந்தாலும் நான் உங்களுடன் இருப்பேன். விரைவில் நான் நேரில் வந்து சந்திக்கிறேன்" என கூறியிருந்தார்.
அப்போது அந்த மக்களும், "உங்கள் மீது தவறு ஏதும் கிடையாது. நீங்கள் எங்களுக்கு ஆறுதல் கூறியதாக நாங்கள் தைரியமாக இருப்போம். நீங்களும் தைரியமாக இருங்கள். நாங்களும் உங்களுடன் எப்போதும் இருப்போம். எனவே தொடர்ந்து முயற்சித்து வாருங்கள்.
இது போல் கரூர் மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள சில குடும்பத்தினரிடமும் விஜய் பேசியுள்ளார். அது போல் விஜய் கரூர் செல்ல டிஜிபியிடம் அனுமதி கோரி மனு அளித்துள்ளார். இதற்கு முன்பாக கரூருக்கு விஜய் செல்வதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
ஏற்கெனவே நடந்தது போல் துயர சம்பவம் மீண்டும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் மீதோ அல்லது விஜய் மீது கரூர் மக்கள் யாருக்கும் எந்தவித கோபமும் இல்லை. கரூர் சம்பவத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது தொடர்பாக அந்த பகுதி மக்களுக்கு ஒரு எண்ணம் உள்ளது. இது தொடர்பான விசாரணை முடிந்த பிறகு அந்த சம்பவத்திற்கான உண்மை தெரியவரும்.
கரூர் விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதால் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து நான் எதுவும் இப்போது கருத்து சொல்ல முடியாது. அதை பற்றி பேசினால் சரியாகவும் இருக்காது. விசாரணை முடியட்டும் பார்க்கலாம். இவ்வாறு அருண்ராஜ் தெரிவித்தார்.
கரூர் சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் விஜய் அந்த பகுதி மக்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனம் இருந்து வரும் நிலையில் அவர் பாதிக்கப்பட்ட மக்களை வீடியோ காலில் சந்தித்து வருகிறார். அது போல் கரூர் மக்களை சந்திக்க டிஜிபியிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அருண்ராஜ் கரூரில் முகாமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications