குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா?
சென்னை: விஜய் டெல்லி பயணம் (Vijay Delhi Visit) தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி வந்துள்ள முதல்வர் விஜய் நாளை நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்கு முன் இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் மரியாதையும் நிமித்தமாக சந்தித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி வந்துள்ளார். தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக டெல்லி வந்துள்ளார் விஜய். அன்றைய தினம் பிரதமர் மோடியை சந்தித்த விஜய் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்காமல் திரும்பியிருந்தார். தற்போது மூன்று நாட்கள் பயணமாக டெல்லி வந்துள்ள விஜய் இன்றோ அல்லது நாளை இரவோ சந்திக்கலாம் என கூறப்படுகிறது. இதேபோன்று காங்கிரஸ் தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

டெல்லி புறப்பட்டார் விஜய்
சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுள்ள முதல்வர் விஜய் இரண்டு நாட்கள் டெல்லியில் தங்குகிறார். நாளை (ஜூன் 11) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் விஜய், மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள், நிதி விவகாரம், கூட்டாட்சி முறை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இதன்பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் இன்று அல்லது நாளை விஜய் சந்தித்து பேசலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
இரவு விருந்தில் பங்கேற்கும் முதல்வர்
நாளை நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பின் டெல்லியில் முதலமைச்சர்களுக்கு இரவு விருந்துக்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ளதாகவும், இந்த விருந்தில் முதல்வர் விஜய்யும் பங்கேற்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இன்று காலை 8 மணியளவில் விஜய் டெல்லி புறப்பட்டு செல்ல இருந்தது. ஆனால் இயக்குனர் பாரதிராஜா உயிரிழந்ததை அடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு காலை 9.30 மணியளவில் அவர் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் கடந்த மாதம் 27 ஆம் தேதி டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. எனவே இந்த பயணத்தின் போது அவர் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேச அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
