விஜய் விழுந்துட்டாரு! என்ட்ரி கொடுத்த எடப்பாடி மகன்..அதிமுகவுடன் ஐக்கியமாகும் தவெக! தடதடத்த தருமபுரி
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் விஜய் தரப்புடன் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதை அடுத்துதான் எடப்பாடி பழனிச்சாமியின் பிரசார கூட்டங்களில் தவெகவின் கட்சி கொடிகளுடன் பங்கேற்று வருகின்றனர் என்கின்றனர் அதிமுகவினர்.
கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற 'தமிழக வெற்றிக் கழகம்' (த.வெ.க.) தலைவர் விஜயின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், தமிழ்நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நிகழ்வில் 41 பேர் உயிரிழந்ததோடு, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பேரவலம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கூட்ட நெரிசல் விபத்துகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கான காரணங்களை வெளிக்கொணர தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்
அதனுடன், கரூர் போலீசார் த.வெ.க. நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர். இந்த பேரவலத்தின் பின்னணியில், "அரசியல் கட்சிகள் நடத்தும் 'ரோடு ஷோ'களுக்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்கப்படும்வரை அவற்றுக்கு அனுமதி வழங்கக்கூடாது" என்று வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் மேலும் விரிவான விசாரணை தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
எஸ்ஐடி விசாரணை
அதன்படி, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டார். இதில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். மேலும், இதுவரை விசாரணை செய்திருந்த போலீஸ் அதிகாரி ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த் சேகரித்த அனைத்து ஆவணங்களும் மற்றும் ஆதாரங்களும் உடனடியாக புதிய விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த உத்தரவையடுத்து, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் சம்பவம் நடந்த இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டது.
விஜய் கைது
தொடர்ந்து விஜய் இடமும் விசாரணை நடத்தப்படலாம் என சொல்லப்படும் நிலையில் தேவைப்பட்டால் அவர் கைது செய்யப்படலாம் என்றும் சொல்கின்றனர். இந்த நிலையில் விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் நடத்த வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கரூரில் ஏற்கனவே பிரச்சனையால் மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது என அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுக தவெக கூட்டணி
இந்த நிலையில் தான் போராட்டத்தில் குதித்தால் அவர்களுக்கு ஆதரவாக அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகனான மிதுன் விஜய்க்கு நெருக்கமான ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் பல கட்சிகள் விஜய்க்கு எதிராக பேசி வரும் நிலையில் முதன்முதலாக விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி தான். அதனால் விஜய் எடப்பாடி மீது ஒருவித ஆதரவு மனநிலையில் தான் இருக்கிறார்.
எடப்பாடி மகன்
இந்த நிலையில் மிதுனின் பேச்சுவார்த்தையை அடுத்து அதிமுகவினரின் கூட்டங்களில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தினர் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் நடத்திய நிலையில் அதில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கட்சி கொடிகளுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications