விஜய் அமைச்சரவையில் ’இதை’ கவனிச்சீங்களா? ஜெயலலிதாவின் ’சவுத்’ பாலிடிக்ஸ்! தவெக போடும் கணக்கு!
சென்னை: தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய், தனது முதல் அமைச்சரவையிலேயே தென்மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் தவெக பெற்ற வெற்றியை அங்கீகரிக்கும் வகையில், 3 அமைச்சர்கள் மற்றும் தற்காலிக சபாநாயகர் பதவி அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களமிறங்கி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு தனிப்பெரும்பான்மை மட்டும் கிடைக்கவில்லை.

பின்னர் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவியேற்றார்.
விஜய் அமைச்சரவை
அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்ற நிலையில், அமைச்சரவை அமைப்பில் தென்மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அதிகம் பேசப்படுகிறது. குறிப்பாக மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற நிர்மல்குமார், காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தோற்கடித்த மருத்துவர் டி.கே.பிரபு, சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
தென்மாவட்ட அரசியல்
இதனுடன், மதுரை அருகே உள்ள சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்ற கருப்பையாவுக்கு தற்காலிக சபாநாயகர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சரவை மட்டுமின்றி சட்டப்பேரவை நிர்வாகத்திலும் தென் மாவட்டங்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. தவெக வட்டாரங்கள் கூறுவதாவது, தென் தமிழகத்தில் கட்சி எதிர்பார்த்ததை விட பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது என்பதே இந்த முக்கியத்துவத்திற்கு காரணம் என தெரிவிக்கின்றன.
சவுத் பாலிடிக்ஸ்
தென்மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளில் 25 இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது. மேலும் பல இடங்களில் இரண்டாவது இடத்திலும் வந்துள்ளது. இதனால், திமுக கூட்டணிக்கு இணையான அரசியல் சக்தியாக தென் மண்டலத்தில் தவெக உருவெடுத்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர். அதனால்தான் முதல் அமைச்சரவை பட்டியலிலேயே தென்மாவட்டங்களுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தவெக அமைச்சரவை
குறிப்பாக மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக வாக்கு வங்கி வேகமாக உயர்ந்திருப்பது விஜய் தலைமையினரை உற்சாகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எதிர்கால அமைச்சரவை விரிவாக்கத்திலும் தென்மாவட்டத்தை சேர்ந்த மேலும் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தவெக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அமைச்சரவை விரிவாக்கம்
குறிப்பாக மதுரை மத்திய மற்றும் மதுரை கிழக்கு தொகுதிகளில் திமுக அமைச்சர்களை தோற்கடித்த தவெக எம்எல்ஏக்களில் ஒருவருக்கு அடுத்த கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த நடவடிக்கை வெறும் பிராந்திய அரசியல் மட்டுமல்லாமல், எதிர்கால அரசியல் கணக்கையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஜெயலலிதா
தென் தமிழகத்தில் தொடர்ந்து வலுவான ஆதரவை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே விஜய் இந்த பிரதிநிதித்துவத்தை வழங்கியிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. தனது முதல் அமைச்சரவையிலேயே தென்மாவட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ள விஜய், தமிழக அரசியலில் ஜெயலலிதா போல் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை தனது ஆதரவு பகுதியாக உருவாக்க முயற்சிக்கிறார் என்ற கருத்து தவெகவினரால் முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications