பொங்கலுக்குள் தவெக ஆட்சிக்கு ஆபத்து? திமுக முன்னாள் அமைச்சர்களின் ரகசிய மீட்டிங்?
சென்னை: விஜய் தலைமையில் அமைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் சிறுபான்மை அரசு 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரத்திலும் அரசியல் அரங்கிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புயல் வீசத் தொடங்கியிருக்கிறது.
ஆட்சி அமைந்த தொடக்கத்திலிருந்தே பல்வேறு நிர்வாகக் குளறுபடிகள், அதிகாரிகளின் அதிரடி முடிவுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடனான முரண்பாடுகள் தவெக ஆட்சிக்குத் தொடர் சவாலாக இருந்து வருகின்றன. குறிப்பாக, அரசுக்கு வெளியிலிருந்து நிபந்தனை ஆதரவு வழங்கி வரும் இடதுசாரி கட்சிகள், மாணவர் போராட்டம் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் பழைய அதிமுக புள்ளிகளை வளைக்கும் முயற்சிகளுக்கு எதிராக பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளன.

இத்தகைய உள்கட்சி மற்றும் கூட்டணிக் குழப்பங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, விஜய் தலைமையிலான ஆட்சியை விரைவில் கவிழ்க்க பிரதான எதிர்க்கட்சியான திமுக வியூகம் வகுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் மிகத் தீவிரமான தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
ரகசியக் கூட்டமும் பொங்கல் கெடுவும்
சமீபத்தில் சட்டரீதியான கடுமையான வழக்குகளில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்திய கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டில், சில முக்கிய முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்ற ரகசியக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மிகத் தீவிரமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய அந்த கொங்கு மண்டலப் புள்ளி, தவெக அரசு பழைய விவகாரங்களைத் தோண்டித் துருவி நமக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கிவிட்டது. இதற்கு மேலும் நாம் பொறுமை காக்க முடியாது. வரும் பொங்கல் பண்டிகைக்குள் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பியாக வேண்டும். அவர்களின் கட்சியிலேயே யாரும் நிம்மதியாக இல்லை..
பல இடங்களில் அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள். நமது 'ஸ்லீப்பர் செல்கள்' தவெக உள்ளேயே தயாராக இருக்கிறார்கள். சேலம் புள்ளியைத் தனியாக நான் கவனித்துக் கொள்கிறேன். எதற்கும் தயங்காமல் சட்டப்பேரவையில் துணிச்சலாக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும்" என்று பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவை விலக்க திட்டம்?
திமுகவின் திட்டம் வெறும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தோடு நின்றுவிடவில்லை. தவெக அரசுக்கு போதிய தனிப்பெரும்பான்மை இல்லாத பலவீனத்தை துல்லியமாகக் குறிவைக்கின்றனர். தற்போதைய சூழலில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகளின் ஆதரவிலேயே விஜய் அரசு சட்டப்பேரவையில் நீடிக்கிறது. இதில் குறிப்பாக சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ கட்சிகளுக்கும் அரசுக்கும் இடையே நிலவும் விரிசலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த திமுக தீவிரமாக முயல்கிறது.
அரசின் முடிவுகளில் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் ஒடுக்கப்படுவதாகவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, இடதுசாரிகளையும் மற்ற கூட்டணிக் கட்சிகளையும் தவெக அரசுக்கான ஆதரவை முழுமையாகத் திரும்பப் பெற வைக்கும் மறைமுக அரசியல் நகர்வுகளை திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆட்டம் காணுமா தவெக அரசு?
சட்டமன்றத்தில் உள்ள மெஜாரிட்டி பலம் மிகவும் நூலிழையாக இருக்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகள் முறுக்கிக் கொண்டால் தவெக அரசு கடுமையான நெருக்கடியைச் சந்திக்கும். அதே சமயம், தங்கள் கட்சிக்குள் ஊடுருவியுள்ள அதிருப்தியாளர்களைக் கண்டறிந்து கட்சியைத் தக்கவைப்பது மற்றும் கூட்டணித் தோழர்களின் அதிருப்தியை உடனடியாகப் போக்கி சமரசம் செய்வது என இருமுனைப் போராட்டத்தை முதல்வர் விஜய் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மறுபுறம், ஆட்சிக்கு எதிராக உள்ளடி வேலைகளை ஒருங்கிணைத்து வரும் திமுக முன்னாள் அமைச்சர்களின் இந்த 'பொங்கல் ஆபரேஷன்' திட்டத்தை உளவுத்துறை மூலமாக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே அடுத்தகட்ட திருப்பமாக அமையப் போகிறது. தமிழக அரசியல் களம் அடுத்த சில வாரங்களில் மிகக் கடுமையான புயலைச் சந்திக்கத் தயாராகிவிட்டது.


Click it and Unblock the Notifications
