பாஜக நினைத்ததை விஜய் செய்துவிட்டார்.. திமுக - தவெக இடையேதான் போட்டி.. பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரே போடு
சென்னை: பாஜக நினைத்ததை விஜய் செய்துவிட்டார் என்றும், அதிமுக தனித்துவத்தை இழந்து வருகிறது எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விஜய் சொல்வது போல தவெக - திமுக இடையே தான் போட்டியே என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணா மீதான பற்றில் அரசியலுக்கு வந்த பண்ருட்டியார், எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை தொடங்கிய நிலையில் இவ்வாறு பேசியிருக்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி உள்ளது. ஆட்சியில் உள்ள திமுக கூட்டணி திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்று வலுவாக உள்ளது. மற்றொரு புறம் இந்த முறை எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று அதிமுக - பாஜக கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம்
திமுக கூட்டணியில் கடந்த முறை உள்ள காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, கமல்ஹாசனின் மநீம உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கூடுதலாக கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்தின் தேமுதிக வந்துள்ளது. கூட்டணிக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையும் திமுக தொடங்கியுள்ளது.
எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நாளை முதல் நடக்கிறது. இதேபோல் அதிமுக பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைந்துள்ளது. பாமக அன்புமணி தரப்பும் இனைந்துள்ளது. இதற்கிடையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலை முதல் முறையாக சந்திக்க உள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
கட்சியின் தலைவர் விஜய் தவெக - திமுக இடையே தான் போட்டி என ஒவ்வொரு மீட்டிங்கின்போதும் சொல்லி வருகிறார். அதிமுக - பாஜக கூட்டணி ஒரு புறம் பலம் வாய்ந்ததாக இருக்கும் சூழலில் விஜய்யின் இந்த பேச்சு அரசியல் ரீதியாக விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் கால அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரனும் இந்த தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி என கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுக பக்கமும், விஜய்யின் தவெக பக்கமும் சென்று வருகிறார்கள். இந்த சூழலில் தான் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன். இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் மக்கள் சக்தி கொண்ட இயக்கத்திற்கு ஆதரவு அளிப்போம் என்றும் கூறினார்.
அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிட்டார்
இதனால் அவர் விஜய்யின் தவெக பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்லி வந்தனர். இந்த நிலையில் அவரது சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்று அதனை மையப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், அதிமுக தன் தனித்துவத்தை படிப்படியாக இழந்து வருகிறது.
அதிமுக இடத்தை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பிடித்துவிட்டது. முதலில் அதிமுக இடத்தை பாஜக பிடிக்க நினைத்தது. ஆனால் இடையில் புகுந்து விஜய் அந்த இடத்தை பிடித்துக்கொண்டார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை மையப்படுத்தி பேசி வருகிறார் விஜய். தமிழத்தில் திமுக - தவெக இடையே தான் தற்போது போட்டி இருக்கிறது. நாளுக்கு நாள் விஜய்க்கு மக்கள் செல்வாக்கு கூடிக்கொண்டே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications