தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே!
புதுச்சேரி: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தேர்தலுக்கு பின் விஜய்யுடன் பேசி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிஒக்கு வராது என்று கூறிய ராம்தாஸ் அத்வாலே, தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் என்டிஏ கூட்டணியின் ஆட்சியே அமையும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக என்று 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அதேபோல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. அதேபோல் விஜய் இன்னொரு பக்கம் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் புதுச்சேரி வந்த மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ராம்தாஸ் அத்வாலே பேசுகையில், நாகலாந்து மாநிலத்தில் கூட எங்கள் கட்சிக்கு 2 எம்எல்ஏ-க்கள் இருக்கின்றனர். அதனால் இந்த இரு மாநிலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. தேசிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்திய குடியரசு கட்சியை வலுப்படுத்துவோம். அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. அசாம் மற்றும் புதுச்சேரியில் ஏற்கனவே என்டிஏ ஆட்சி இருக்கிறது.இந்த இரு மாநிலங்களில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைய கட்சியினர் உழைக்க வேண்டும். அதேபோல் கேரளாவை பொறுத்தவரை சிபிஎம் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதனால் பாஜக கட்டாயம் வெல்லும்.
மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜியின் ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வரும். தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரப் போவதில்லை. அங்கு நடிகர் விஜய்யும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஒருவேளை தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தவெக தலைவர் விஜய்யிடம் பேசி ஆதரவு கோருவோம். தமிழ்நாட்டில் விஜய்யுடன் பேசி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications