அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டிஆர் பாலு.. "திமுக ஃபைல்ஸ்" திடீர் ட்விஸ்ட்! என்ன நடந்தது?
சென்னை: அண்ணாமலை மீது தொடர்ந்திருந்த அவதூறு வழக்கை திமுக பொருளாளர் டிஆர் பாலு வாபஸ் பெற்றுள்ளார். கடந்த 2023-ல் வெளியான "DMK Files" விவகாரத்தைத் தொடர்ந்து தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது அண்ணாமலையே நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் வாதாடியிருந்தார். இரு தரப்பினரும் காரசாரமாக வாதிட்டு வந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த வழக்கினை டி.ஆர் பாலு வாபஸ் வாங்கியுள்ளது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
முன்னாள் தமிழக பாஜக தலைவரும், வி த லீடர் இயக்கத்தின் தலைவருமான அண்ணாமலை, கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் பலரது சொத்து விவரங்களை 'திமுக ஃபைல்ஸ்' (DMK Files) என்ற பெயரில் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.

அண்ணாமலை மீது அவதூறு வழக்கு
குறிப்பாக அண்ணாமலை, "திமுக பொருளாளரும், எம்பியுமான டிஆர் பாலு மற்றும் அவரது மகனும், அமைச்சருமான டிஆர்பி ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு மட்டும் மொத்தமாக 21 நிறுவனங்கள் சொந்தமாக இருப்பதாக கூறினார். அதுமட்டும் இல்லாமல், டி ஆர் பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு சொத்துகள் இருப்பதாகவும் கூறினார். அப்போது இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே இதற்கு பதில் தெரிவித்த டி ஆர் பாலு, அண்ணாமலையின் குற்றச்சாட்டு தன்னுடைய பெயருக்கும் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அண்ணாமலை மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கினை தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக பல கட்ட விசாரணைகள் நடந்தன. குறிப்பாக டி.ஆர் பாலுவின் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காரசாரமாக வாதிட்ட டிஆர் பாலு - அண்ணாமலை
அண்ணாமலையும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகி வாதாடியிருந்தார். திமுக எம்பி டிஆர் பாலு, அண்ணாமலை ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒருவரது கேள்விக்கு ஒருவர் பதில் அளித்தனர். அண்ணாமலை தரப்பு நடத்திய குறுக்கு விசாரணை கேள்விகளுக்கு டிஆர் பாலு பதில் அளித்தார். குறிப்பாக டிஆர் பாலுவிடம், அண்ணாமலை 3 மணி நேரமாக குறுக்கு விசாரணை செய்தார்.
சேது சமுத்திர திட்டத்தின் பெயரில் ஊழல் செய்தது, சொந்தமாக கப்பல்கள் வாங்கியது. தனியார் நிறுவனங்கள் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியது, சொந்தமான 18 சொகுசு கார்கள், மகன் நடத்தும் கோல்டன் வாட்ஸ் மதுபான ஆலை என பல்வேறு கேள்விகளை அண்ணாமலை எழுப்பினார். மேலும் அதற்கான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் அண்ணாமலை சமர்ப்பித்தார். இதற்கு நீதிமன்றத்தில் பதில் அளித்த டி ஆர் பாலு, சில கேள்விகளுக்கு தெரியாது என்றும், பல கேள்விகளுக்கு சரியல்ல என்றும் பதில் கூறினார்.
டிஆர் பாலு வாபஸ் பெற்றார்
சாராய ஆலை தொடர்பான கேள்விக்கு அது ரசாயண ஆலை எனவும், நான் அதில் ஒரு பங்குதாரர் மட்டுமே என்றும் பதில் அளித்தார். இவ்வாறாக இந்த வழக்கில் அண்ணாமலை டி ஆர் பாலு இடையே காரசார வாதம் நடந்தது வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் 6 வது ஜட்ஜ்மெண்ட் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை மீதான வழக்கினை வாபஸ் பெறுவதாக டி.ஆர் பாலு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பினரும் காரசாரமாக வாதிட்டு வந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த வழக்கினை டிஆர் பாலு தரப்பு வாபஸ் வாங்கி இருப்பது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
வாபஸ் பெற காரணம் என்ன?
முன்பு திமுக ஆட்சியில் இருந்தது. அண்ணாமலையும் தமிழக பாஜக தலைவராக இருந்தார். இதனால் அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தார். திமுக மீதான பல்வேறு ஊழல்களை வெளியில் கொண்டு வருவேன் என கூறி வந்தார். பதிலுக்கு திமுகவும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வந்தது. ஆனால் இப்போது தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுகவும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை.
அண்ணாமலையும் பாஜகவில் இருந்து விலகி வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தினை ஆரம்பித்துள்ளார். மாறியுள்ள அரசியல் சூழல் கருதியும் இந்த முடிவினை டி.ஆர் பாலு எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.















Click it and Unblock the Notifications