ஆஹா..ஒன்னு கூடிட்டாங்களே! 18,72,878 பேர்.. அண்ணாமலை பின்னால் ‘தாமரை’ சொந்தங்கள்! அலர்ட் ஆன கமலாலயம்!
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தில் தொடர்ந்து லட்சக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவினர் அந்த இயக்கத்தில் இணைந்து வரும் நிலையில், அவர்கள் இணைவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் அவசர அவசரமாக சமாதான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மாவட்ட அளவில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டங்களில், "யாரும் கட்சியை விட்டு வெளியேறக் கூடாது" என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அண்ணாமலை தனது புதிய இயக்கமான 'வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கினார். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட சில வாரங்களிலேயே உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இன்று வரை 18,72,878 பேர் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையிலேயே மிகப் பெரிய எண்ணிக்கை என்று சொல்கின்றனர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் அவரது பேச்சு, செயல்பாடு மற்றும் அரசியல் பாணியால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்த இளைஞர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள், தற்போது அவரது புதிய இயக்கத்தில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால், பாஜக தலைமைக்கு கவலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியை விட்டு விலகி அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீ த லீடர்ஸ்
இதைத் தொடர்ந்து, மேலும் நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேறுவதைத் தடுக்க மாநில அளவில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மாவட்டத் தலைவர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்று, கட்சியின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்.
பாஜக
மதுரையில் உள்ள மூன்று அமைப்புரீதியான கட்சி மாவட்டங்களில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, நாகர்கோவில் முன்னாள் நகராட்சி தலைவர் மீனாதேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டங்களில் பேசிய நிர்வாகிகள், "யாரும் கட்சியை விட்டு வெளியேற வேண்டாம். பாஜக ஒரு தேசியக் கட்சி. தனிநபர்களை விட கொள்கை முக்கியமானது. இதற்கு முன்பும் பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்கள். ஆனால் அதனால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படவில்லை. எனவே அனைவரும் கட்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல்
மேலும், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கான தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் பாஜகவில் இணைக்கும் முயற்சியையும் மாவட்ட நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அண்ணாமலையின் 'வீ த லீடர்ஸ்' இயக்கம் தொடங்கப்பட்டு சுமார் 20 நாட்கள் ஆகியும், உறுப்பினர் எண்ணிக்கை இன்னும் 20 லட்சத்தை எட்டவில்லை. இதனால், பெரும்பாலான பாஜக தொண்டர்கள் கட்சியிலேயே தொடர்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
உறுப்பினர் சேர்க்கை
இருந்தாலும், அண்ணாமலையுடன் செல்லும் மனநிலையில் இருப்பவர்களை சந்தித்து பேசி, அவர்களை கட்சியில் தொடர வைக்கும் முயற்சியில் மாநில நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்" என்றார். அண்ணாமலையின் புதிய இயக்கம் ஒரு புறம் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் பாஜக தனது நிர்வாகிகளை தக்கவைத்துக் கொள்ள மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவது, தமிழக பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications