“பதவி இல்லை என்றால் உயிர் போய்விடுமா? அசிங்கம் பண்ணாதீங்க”.. கொந்தளித்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
சென்னை: "சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சுயநலப் பதவிகளுக்காகவும், சில காரணங்களுக்காகவும் வேறு அணிக்குத் தாவுவது தார்மீக விதிகளுக்கு எதிரானது. வாக்களித்த மக்களுக்குச் செய்யும் அசிங்கமான துரோகம். பதவி இல்லை என்றால் அரசியல்வாதிகளுக்கு உயிர் போய்விடுமா?" என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரத்தின் மூலமாக இழுக்கக்கூடிய செயல்கள் நடைபெறுகின்றன. நாகரீக அரசியலை சொந்தம் கொண்டாடிய தமிழ்நாடு இன்று கேலிக்கூத்தாக மாறியுள்ளது என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணசாமி பேட்டி
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி பேசுகையில், "தேர்தல் நேரங்களில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஒரு தேர்தலில் ஒரு கூட்டணியில் இருப்பவர்கள், அடுத்த தேர்தலில் வேறு கூட்டணிக்கு மாறுவார்கள். ஆனால், இந்தத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளது. ஒரு கட்சியில் அல்லது ஒரு அணியில் வெற்றி பெற்றவர்கள், மற்றொரு அணிக்கு மாறுவது, அவர்களை இழுப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, தமிழகத்தில் இதுவரை ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஆறோடு நிற்குமா? அல்லது 16 ஆகுமா, 60 ஆகுமா, 100 ஆகுமா என்று சொல்ல முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தினமும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்கு மாறுகிறார், இன்னும் 6 பேர், 10 பேர் தயாராக இருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
அசிங்கமான துரோகம்
எந்த அளவிற்கு ஒரு நாகரீகமான அரசியலுக்குச் சொந்தக்கார மாநிலமாகத் தமிழ்நாடு இருந்ததோ, அந்தத் தமிழ்நாடு இன்று அண்டை மாநிலங்களாலும், இந்திய அளவிலும், ஏன் உலக அளவிலும் ஒரு கேலிக்கூத்தாகப் பார்க்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரத்தின் மூலமாக இழுக்கக்கூடிய செயல்கள் நடைபெறுவதாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சுயநலப் பதவிகளுக்காகவும், சில காரணங்களுக்காகவும் வேறு அணிக்குத் தாவுவது தார்மீக விதிகளுக்கு எதிரானது. வாக்களித்த மக்களுக்குச் செய்யும் அசிங்கமான துரோகம். பதவி இல்லை என்றால் அரசியல்வாதிகளுக்கு உயிர் போய்விடுமா? இத்தகைய அநாகரிகச் செயல்களால் தமிழ்நாட்டில் மீண்டும் இடைத்தேர்தல் நடக்கும் சூழல் உருவாகி, தமிழக அரசியல் உலகளவில் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.
இதுபோன்ற தவறைச் செய்யக்கூடாது
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எண்ணங்களையும், மனதையும் மாற்றுவது என்பது அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இதுபோன்ற தவறுகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யக்கூடாது. அதேபோல, தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவோ அல்லது நிலைநிறுத்துவதற்காகவோ மற்றவர்களை ஆசை வார்த்தைகள் காட்டி இழுக்கும் செயல்களில் பிறரும் ஈடுபடக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம்
மேலும் பேசிய கிருஷ்ணசாமி, "காவிரியின் குறுக்கே மேகதாது அணையைத் தங்களது அசாத்திய பிடிவாதத்துடன் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து தீவிர முயற்சி செய்து வருகிறது. அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இதில் மிகவும் தீர்க்கமாக உள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத்தில் பல சடங்குத் தீர்மானங்கள் இயற்றப்பட்டுவிட்ட போதிலும், கர்நாடக அரசு அதனைச் சற்றும் கண்டுகொள்ளவில்லை.
எனவே, முதலமைச்சர் அவர்கள் வெறும் தீர்மானங்களோடு நிறுத்திவிடாமல், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒட்டுமொத்தப் பிரதிநிதிகளையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்திக்க வேண்டும். மத்திய நீர்வளத்துறை அணை கட்ட எவ்வித அனுமதியும் அளிக்காத வகையில் அழுத்தத்தை அதிகாரப்பூர்வமாக வழங்க வேண்டும்.
போதைப்பொருள்
கடந்த ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது நல்ல முயற்சிதான். ஆனால், போதைக்கு எதிராகப் பேசுபவர்கள் முதலில் அந்தப் பழக்கத்தில் முற்றிலும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். போதை என்பது வெறும் நாள்காட்டி சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல.
தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கும் அசுர ஆபத்தாக மது விளங்குகிறது. தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக அரசு கூறுவது வெறும் கண் துடைப்பு மட்டுமே, இதனால் மது விற்பனை எங்கும் குறையவில்லை. எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை எப்போது கொண்டு வரப்போகிறீர்கள் என்பதற்கான கால நிர்ணயத்தை அரசு உடனடியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications