தமிழகத்தில் இனி எல்லாமே ஏசி பேருந்துகள் தான்.. போக்குவரத்துத் துறை அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் இனி வாங்கும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஏசி பேருந்துகளாக இருக்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயணம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்றும் அமைச்சர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நடைபெற்ற மக்களுக்கான மருத்துவ முகாமை துவக்கி வைத்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

போக்குவரத்து அமைச்சர் பேட்டி
தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழகத்தில் அனைத்துப் பேருந்துகளிலும் மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டத்தை விரைவாக கொண்டு வருவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார்.
கனெக்டிவிட்டி
போக்குவரத்துத் துறையில் வருவாய் பெருக்குவதற்கு செயல்திட்டங்கள் வகுத்து ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகையிலும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும் என்பதற்காக அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும்.
தமிழக முதல்வர் சொன்ன முதல் வார்த்தையே குக்கிராமங்களையும் , மாநகரையும் இணைக்க வேண்டும் என்பதுதான் முதல் கொள்கையாக வைத்துள்ளார். இணைப்பு இல்லை என்பதே இருக்கவே கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்." எனத் தெரிவித்துள்ளார்.
இனி ஏசி பேருந்து தான்
மேலும் பேசிய அமைச்சர் பார்த்திபன், "சென்னையில் நடைபெற்ற புதிய பேருந்து சேவை தொடக்க விழாவில் அரசு பேருந்தில் முதல்வர் பயணித்தபோது, அனைத்து மக்களும் ஏசி பேருந்தில் பயணிக்க வேண்டும் என்று கூறினார். இனிவரும் காலங்களில் ஏசி பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் இனி ஏசி பேருந்தில் பயணிக்க வேண்டும் என்றும் முதல்வர் விரும்புகிறார். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications