Annamalai: இடைத்தேர்தல்: பெருந்துறையில் களமிறங்கும் அண்ணாமலை? விஜய்க்கு காத்திருக்கும் அக்னி பரிட்சை
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 தொகுதி இடைத்தேர்தலில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அண்ணாமலையும் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெருந்துரை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட இருப்பதாகவும், இதற்கான தீவிர ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜய்க்கு இந்த இடைத்தேர்தல் அக்னி பரீட்சையாகவே இருக்கக் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை என கூறப்படுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு பெருந்துறை தொகுதியில் "வி தி லீடர்ஸ்" அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படும் நிலையில், இது பற்றி விரைவில் அண்ணாமலை ஆலோசித்து முடிவு செய்வார் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

இடைத்தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றது. விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் பெரம்பூர் தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேரில், நான்கு எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
மு.க ஸ்டாலினும் போட்டியா?
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், தற்போதைய நிலவரப்படி 6 தொகுதிகள் காலியாக உள்ளன. திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை என ஆறு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 6 தொகுதியிலும் வென்று தனிப்பெரும்பான்மை பக்கம் நெருங்கிவிட வேண்டும் என்பதில் விஜய் வியூகம் வகுத்து வருகிறார்.
அதே நேரத்தில் இடைத்தேர்தலில் தவெகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக உள்ளன. சட்டசபையில் விஜய், அப்பாவை காணோம் என்று பேசியது திமுகவினரை சூடாக்கியிருக்கிறது. இதனால், திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க ஸ்டாலினை போட்டியிட வைக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வருகிறார்கள். மு.க ஸ்டாலினும் இது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று சொன்னாரே தவிர மறுக்கவில்லை. இதனால் திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
சீமானை தொடர்ந்து அண்ணாமலையும் போட்டி?
மற்றொரு பக்கம், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதியில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளாராக சீமான் களமிறங்க உள்ளாரா? என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் அடிபட தொடங்கியுள்ளது. இதனால், இடைத்தேர்தலில் தவெகவிற்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜகவில் இருந்து விலகி வி தி லீடர்ஸ் அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலையும் இடைத்தேர்தல் களத்தில் இறங்க போகிறாரா? என்ற பேச்சு எழத் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூன் 05 ஆம் தேதி வி தி லீடர்ஸ் அமைப்பை அண்ணாமலை தொடங்கினார். அவரது இயக்கத்தில் தற்போது வரை 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். அடுத்த கட்டமாக அரசியல் கட்சியாக தனது இயக்கத்தை மாற்றி, பொதுத்தேர்தலில் போட்டியிடுவதே இலக்கு என்று அண்ணாமலை அறிவித்து இருக்கிறார். எனினும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டால் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை காட்டலாம் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரிடம் வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது.
தீவிரமாக ஆலோசிக்கும் அண்ணாமலை
இது குறித்து அண்ணாமலையும் தீவிரமாக ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி விரைவில் அண்ணாமலை முடிவு எடுப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்படுகிறது. இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஸ்டாலின், அண்ணாமலை போட்டியிடுவது உறுதியானால், விஜய்யின் தவெகவிற்கு உண்மையான அக்னி பரீட்சையாகவே அது அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்த மூன்று தலைவர்களும் போட்டியிட்டால் பொதுத்தேர்தலுக்கு நிகரான பரபரப்புடன் இடைத்தேர்தல் களம் இருக்கும்..















Click it and Unblock the Notifications