இதய வாசலை திறந்து காத்திருக்கிறேன்.. தவெக மாநாட்டுக்கு முன் விஜய் வெளியிட்ட உணர்வுப்பூர்வ அழைப்பு
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து நடிகர் விஜய் உணர்வுப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் தவெக தொண்டர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்துள்ளார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ள விஜய் அதற்கான கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். 2026ல் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து நடிகர் விஜய் அரசியல் களம் புகுந்துள்ள நிலையில் இன்னும் கட்சி கொள்கைகளை அவர் வெளியிடவில்லை.

இதற்கிடையே தான் வரும் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளதோடு, தொண்டர்கள், ரசிகர்கள் வந்து செல்ல வசதியாக 100க்கும் அதிகமான ஏக்கரில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விஜய் ரசிகர்கள், அவரது கட்சி தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் முதல் அரசியல் மாநாட்டுக்கு வரும்படி நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து உணர்ச்சிப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கை திரவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப்போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது.
உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப்போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படி சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப போற்றும் விதமாக கொண்டாடுவோம் நம் வெற்றி கொள்கை திருவிழாவை.
அத்திருவிழாவை கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியை கைகளிலும், மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இருகரங்களையும் விரித்தபடி, இதய வசாலை திறந்து வைத்து காத்திருப்பேன்.
வாருங்கள். மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளை செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூக சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications