“விஜய் மக்களுக்காக வரவில்லை.. கைது பயத்தால் வீடியோ வெளியிட்டுள்ளார்”.. ராஜகம்பீரன் குற்றச்சாட்டு!
சென்னை: "விஜய் தனக்காக உயிரை விட்டவர்களுக்காக துக்கப்படவில்லை. தன்னைப் பார்க்க வந்து உயிரிழந்தவர்கள் இறந்த துக்கத்தை விட, தன்னைச் சார்ந்தவர்கள் மீது வழக்குப் போட்டு தன்னையும் சிக்கவைத்து விடுவார்களோ என்ற அச்சம்தான் விஜய்க்கு அதிகமாக இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த பெரும் துயரச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கரூர் துயரச் சம்பவத்தில் பலரும் உயிரிழந்த தகவல்கள் வந்துகொண்டிருந்தபோதே சென்னைக்கு கிளம்பிச் சென்றார் விஜய்.

விஜய் வீடியோ
கரூர் துயரச் சம்பவத்திற்கு மூன்று நாட்கள் கழித்து, இது தொடர்பாக விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "சி.எம் சார், உங்களுக்கு ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. அவர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்." எனக் கூறியுள்ளார் விஜய்.
விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியிருக்கும் விஷயங்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில், அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன், விஜய்யின் வீடியோ தொடர்பாக நமது ஒன் ஒந்தியா தமிழுக்கு தொலைபேசி வாயிலாக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பேட்டி
ராஜகம்பீரன் பேசுகையில், "இரங்கல் தெரிவித்து காணொளி வாயிலாக பேசவேண்டும் என விஜய் விரும்பி இருந்தால் அன்று இரவே பேசியிருக்க வேண்டும். அப்போது கூட அரசியலை கடந்து உயிர்பலிக்கு கண்ணீரை காணிக்கையாக்கும் உரையாடலைத்தான அவர் நிகழ்த்தி இருக்க வேண்டும். நீதிமன்றம் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகுதான் பேச வந்திருக்கிறார்.
விஜய்க்கு தான் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சுறுத்தல் வந்த பிறகுதான் அதில் இருந்து தப்பிக்கும் முகமாகவே அவர் வீடியோவில் பேசி இருக்கிறார். இப்போது கூட நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கும் தொனியில் பேசாமல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பது போலவே பேசுகிறார். சி.எம் சார் என்னை பழிவாங்குங்கள் என்னை சுற்றி இருப்பவர்களை விட்டு விடுங்கள் என சினிமா டயலாக் பேசுகிறார்.
குற்ற உணர்ச்சி இல்லாமல்
களத்தில் நிலவும் துயரத்தை விஜய் உண்மையிலேயே உள்வாங்கி இருக்கிறாரா? குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல், தனக்காக உயிரை விட்டவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன் மீது வழக்கு பாய்ந்துவிடுமோ, அரசியல் ரீதியாக தனது அடுத்தகட்ட பயணத்துக்கு இது தடையாகி விடுமோ என்கிற கவலைதான் அவரது பேச்சில் இருக்கிறது.
விஜய் ஒரு பக்குவப்பட்ட தலைவராக இல்லை. தவெக தொண்டர்கள் அரசியல்மயப் படுத்தப்படவில்லை என்பது தாண்டி அக்கட்சியின் தலைவர் விஜய்யிடமே அரசியல் பண்பாடு சார்ந்து எந்தத் தாக்கமும் தெரியவில்லை. முதிர்ச்சியற்ற தன்மையைத்தான் விஜய் வெளிப்படுத்தி இருக்கிறார்.
விஜய்க்கு பயம்
பேரிடர் காலங்கள், விபத்து சூழல்களில் அரசியல் குற்றச்சாட்டுகளை உடனடியாக யாரும் சுமத்தமாட்டார்கள். ஆனால், துயரம் மக்கள் மனதில் இருந்து நீங்காமல் இருக்கும் நேரத்திலேயே விஜய் அரசியல் குற்றச்சாட்டை சுமத்துகிறார். உயிரின் மதிப்பை விஜய் உணர்ந்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. தன்னைப் பார்க்க வந்து உயிரிழந்தவர்கள் இறந்த துக்கத்தை விட, தன்னைச் சார்ந்தவர்கள் மீது வழக்குப் போட்டு தன்னையும் சிக்கவைத்து விடுவார்களோ என்ற அச்சம்தான் விஜய்க்கு அதிகமாக இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications