நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்
சென்னை: விஜய்யை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வர பவன் கல்யாணை வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அப்போது விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்க முன்வந்ததாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். முழுக்க முழுக்க இது வதந்தி என கூறியுள்ளார்.
தமிழகத்தை அடுத்து ஆளப்போகும் கட்சி எது? என்பதுதான் கடந்த சில வாரங்களாக பேசுபொருளாக இருந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். இதனால் அரசியல் கட்சிகள் பம்பரமாக பணி செய்து வருகின்றன.

தமிழக அரசியல் களம்
வரும் சட்டசபை தேர்தலில் திமுக ஒரு புறம் மெகா கூட்டணியுடன் களம் காண்கிறது. இன்னொரு புறம் ஆட்சியை கைப்பற்ற அதிமுக - பாஜக கூட்டணி வியூகம் அமைக்க, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளன. இதனால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் தவெக தனித்தே களம் காணப்போகிறதா இல்லை அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகிறதா என்ற நிலைப்பாடு இன்னமும் முடிவாகவில்லை. திமுக மற்றும் அதிமுகவில் ஏறக்குறைய கூட்டணி இறுதியாகி விட்டது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வேலையில் அக்கட்சிகள் தீவிரமாகி உள்ளன.
விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி
இந்த நிலையில் தான் விஜய்யை அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வருவதாகவே ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டது. தமிழிசை சவுந்தரராஜனும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு வர வேண்டும் என பலமுறை பேசியுள்ளார். அதே சமயத்தில் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லியிருப்பதால் எந்த அழுத்தம் கொடுத்தாலும் வர முடியாது என்று சொல்லியதாகவே கூறப்பட்டது.
விஜய்க்கு துணை முதல்வர் பதவி
அந்த சமயத்தில் தான் பவன் கல்யாணை வைத்து விஜய்யிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கும் விஜய் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், மீண்டும் விஜய்யிடம் பவன் கல்யாண் பேசியதாக தகவல் வெளியானது. விஜய் தனித்து போட்டியிட்டால் வெற்றி சாத்தியமில்லை.. எனவே கூட்டணிக்கு வந்தால் உங்களுக்கு நல்லது என்று விஜய்யிடம் பேச்சுவார்த்தையை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இதனை பாஜகவின் கே எஸ் ராதாகிருஷ்ணன் உண்மை தான் என கூறியுள்ளார்.
அப்போது விஜய்க்கு துணை முதல்வர் பதவி தருவதாகவும் கூறப்பட்டதாம்.. ஆனால் விஜய் இவை அனைத்தையும் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதே போல் அதிமுகவும் விஜய்யை கூட்டணிக்கு கொண்டுவர முயன்றதாகவும் ஆனால் அதனையும் விஜய் நிராகரித்து விட்டதாகவும் கூறப்பட்டது.
நயினார் நாகேந்திரன் விளக்கம்
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் தகவல் உண்மையில்லை என்று கூறியுள்ளார். நயினார் நாகேந்திரன் கூறுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விஜய்க்கு துணை முதல்வர் பதவி எல்லாம் முழுக்க முழுக்க வதந்தி.. தமிழகத்தில் அடுத்த முதல்வர் எடப்பாடி தான்.." என்று கூறியுள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இருமுறை சிபிஐ விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராகிய நிலையில் தற்போது நாளையும் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோன்று விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்று அளிப்பது தொடர்பாக தணிக்கை குழு படத்தினை பார்க்க இருந்தது. ஆனால் தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இதுவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று விஜய்யின் மனைவி விவாகரத்து கேட்டு இருப்பது, திரிஷாவுடன் திருமண நிகழ்சியில் விஜய் பங்கேற்றது என விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இப்படி நாலாபுறமும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அவர் பாஜக பக்கம் செல்ல இருப்பதாக தகவல் வெளி வந்த நிலையில் நயினார் நாகேந்திரன் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications