அதைத் தாண்டி யாரும் வரக்கூடாது.. திருப்பூர் கூட்டத்தில் திடீரென டென்ஷனான விஜய்
சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். விஜய்யை பார்க்க காலையில் இருந்தே பிரசாரம் செய்யும் இடத்திற்கு தவெக தொண்டர்கள் வந்து இருந்தனர். விஜய் அங்கு வந்ததும் பேச்சை தொடங்கும் முன்பாக தொண்டர்களிடம் கொஞ்சம் டோனை உயர்த்தி அட்வைஸ் கொடுத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனல் பறக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், முதல் முறையாக தேர்தலை எதிர்கொண்டுள்ள தவெக 233 தொகுதிகளில் தனித்து களம் இறங்கியுள்ளது.

காத்துக் கிடந்த தவெகவினர்
எடப்பாடி தொகுதியில் நிறுத்தப்பட்ட தவெக வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடியானதால், அந்த கட்சியால் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுற்றிக்கொண்டு இருக்க விஜய், ஒரு நாள் விட்டு ஒருநாள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று முன் தினம் கன்னியாகுமரியில் பிரசாரம் செய்த விஜய் நேற்று தனது பிரசாரத்திற்கு லீவு போட்டார்.
இன்று திருப்பூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் வந்தார். திருப்பூர் வரும் வழியில் விஜய்யை பார்க்க வழி நெடுக தவெகவினர் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து கை அசைத்துவிட்டு விஜய் வந்தார். இதற்கிடையே திருப்பூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தில் காலையில் இருந்தே தவெகவினர் காத்துக்கிடந்தனர்.
திடீரென டென்ஷன் ஆன விஜய்
கடுமையான வெயிலில் காலையில் இருந்தே காத்துக்கிடந்ததால், 7 பெண்கள் உள்பட 9 பேர் மயக்கம் போட்டனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ்சில் ஏற்றி மருத்துவமனைக்கு தவெக நிர்வாகிகளும் போலீசாரும் அனுப்பி வைத்தனர். கூட்டத்தில் நின்றவர்கள் முண்டியடித்ததால் போலீசார் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்தனர். குழந்தைகளுடன் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். விஜய் வருகை தந்ததும் அங்கிருந்த தவெகவினர் உற்சாக மிகுதியில் தடுப்புகளை தாண்ட முற்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த விஜய், அதை தாண்டி வரக்கூடாது.. அங்கேயே நில்லுங்க.. ப்ளீஸ்.. கொஞ்சம் அமைதியாக நான் சொல்வதை கேளுங்கள்.. ப்ளீஸ்.. ஒரு 5 நிமிஷம் கொஞ்சம் அமைதியாக இருங்க.. ப்ளீஸ்.. நண்பர்களே கொஞ்சம் அமைதியாக இருங்க ப்ளீஸ்.. அதை தாண்டி யாரும் வரக்கூடாது என்று கொஞ்சம் டோனை உயர்த்தி கூறினார். இதன் பிறகே பேச்சை ஆரம்பிக்கலாமா? எனக் கேட்டு விட்டு தனது பேச்சை விஜய் தொடங்கினார்.
கோவை புறப்பட்ட விஜய்
வழக்கமாக தனது பிரசார பேருந்தில் உள்ளே இருந்து நின்றபடி பேசி வந்த விஜய், இன்று பிரசார வேனின் டாப்பில் நின்றபடி பேச தொடங்கினார். பேச்சு முடிந்த பிறகு செங்கோட்டையன் விஜய்க்கு வாள் ஒன்றை பரிசாக அளித்தார். விஜய் பேசி முடித்துவிட்டு மீண்டும் கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். விஜய் செல்லும் வழிகளிலும் தவெகவினரும் பொதுமக்களும் திரண்டு நின்றனர். இதனால், கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் திறந்த வேனில் ஏறி நின்று தொண்டர்களுக்கு கை காட்டிவிட்டு சென்றார்.
விஜய் அறிவுறுத்தலையும் மீறி இன்றும் தேசிய நெடுஞ்சாலைகயில் விஜய் வேனை துரத்தியபடி இளைஞர்கள் பின் தொடர்வதை பார்க்க முடிகிறது. அதேபோல எதிர்திசையிலும் ஆபத்தை உணராமல் விஜய் வேனை பார்த்தபடியே இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் தவெக தொண்டர்கள் சென்றனர்.












Click it and Unblock the Notifications