''விஜய் எப்போது அரசியலுக்கு வருவார்?'' என்னை வம்பில் மாட்டிவிடாதீங்கம்மா! எஸ்கேப் ஆன புஸ்ஸி ஆனந்த்!
சென்னை: ''அண்ணன் விஜய் எப்போது அரசியக்கு வருவார்?'' என்ற கேள்வியை விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் திரும்பத் திரும்ப எழுப்பியதால், அதை ''உங்க அண்ணன்கிட்டயே கேளுங்க, என்னை வம்பில் மாட்டிவிடாதீங்கம்மா'' என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார் புஸ்ஸி ஆனந்த்.
நானும் உங்களை போல் அதற்காக தான் காத்திருக்கிறேன் என்பதை ''I am Waiting'' என்று கூறி நழுவிக்கொண்டார் புஸ்ஸி ஆனந்த். விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற ஒரு கேள்வியை மட்டும் தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் இதனை விஜயிடமே நீங்கள் நேரடியாக கேட்டுக்கொள்ளுங்கள் எனவும் மகளிர் அணி நிர்வாகிகளிடம் கூறிவிட்டார்.

விஜயை அண்ணனாக தாங்கள் பார்ப்பதாகவும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் தங்கள் ஓட்டு விஜய்க்கு தான் எனவும் மகளிர் அணி நிர்வாகிகள் பேசினர். நடிகர் விஜய் எம்.ஜி.ஆர். இடத்தை பிடித்துவிட்டார் என்றும் வேறு யாருடைய பட்டத்துக்கும் ஆசைப்படாதவர் விஜய் எனவும் மகளிர் அணி நிர்வாகிகள் பேசினர்.
அண்மையில் சூப்பர் ஸ்டார் பற்றி கலாநிதி மாறன் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் ஆவேசம் காட்டினர். மொத்தத்தில் திமுக, அதிமுக உட்பட தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இணையாக விஜய் மக்கள் இயக்கத்தில் மகளிர் அணி அமைப்பு வலிமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மிக உன்னிப்பாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications